/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநிலங்களே இருக்கக்கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
/
மாநிலங்களே இருக்கக்கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
மாநிலங்களே இருக்கக்கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
மாநிலங்களே இருக்கக்கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது ராமநாதபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
ADDED : அக் 04, 2025 02:29 AM

ராமநாதபுரம்:தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கைகடற்படையினர் நடத்தும் தாக்குதலை மத்திய பா.ஜ., அரசு கண்டு கொள்வது இல்லை. கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்தில் ஆவேசமாக பேசினார்.
ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஒரு காலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் என்றால், 'தண்ணீர் இல்லாத காடு' என்று சொல்வார்கள். அந்த நிலைமையை மாற்றிக் காட்டியது தி.மு.க. அரசு. கருணாநிதி ஆட்சியில் தான்ரூ. 616 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.
தற்போது புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரிவுபடுத்தும் பணி டிசம்பரில் முடிந்து விடும். இதனால் 3 லட்சத்து 82 ஆயிரத்து 500 வீடுகளுக்கு தண்ணீர் வழங்கப் போகிறோம். இனி யாரும் எப்போதும் ராமநாதபுரம் மாவட்டத்தை தண்ணீர் இல்லாத காடு என்று சொல்ல முடியாது.
தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் நடக்கின்ற தொழிலாக மீன்பிடி தொழில் இருக்கிறது. இதில் 25 சதவீதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமே நடக்கிறது. 2023ல் ராமேஸ்வரத்தில் நடந்த மீனவர் மாநாட்டில் கலந்து கொண்டு 10 அறிவிப்புகளை வெளியிட்டேன். அவற்றை நிறைவேற்றி விட்டோம்.
அதில் ஒன்று 45 ஆயிரம் பேருக்கு மீன் பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும் என்று அறிவித்தோம். ஆனால் இன்று வரை 81 ஆயிரத்து 588 மீனவர்களுக்கு ரூ. 687 கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
தமிழக மீனவர்கள் என்றால் இளக்காரமா தமிழக மீனவர்களுக்கு இருக்கின்ற மிகப்பெரிய பிரச்னை இலங்கைக் கடற்படை தாக்குதல். இதனை தொடர்ந்து கண்டிக்கிறோம். போராட்டம் நடத்துறோம். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு நம்முடைய மீனவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறோம்.
இதை வைத்து இலங்கை அரசுக்கு மத்திய அரசாங்கம் ஒரு கோரிக்கை வைத்திருக்க வேண்டும். அதை செய்யக் கூட பா.ஜ., அரசு மறுக்கிறது. இலங்கை சென்ற பிரதமர் மோடியும் இதை வலியுறுத்த மறுக்கிறார். கச்சத்தீவை தர மாட்டோம் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் சொல்கிறார். இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஏதாவது மறுத்து பேசியிருக்க வேண்டாமா. தமிழக மீனவர்கள் என்றால் மட்டும் அவர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது.
தமிழகத்திற்கு பா.ஜ., வஞ்சகம் நாம் இந்தியர்கள் இல்லையா. தமிழர்கள் என்றாலே பா.ஜ அரசுக்கு ஏன் கசக்கிறது. ஜி.எஸ்.டி.,யால் நிதி உரிமை போய்விட்டது. நிதிப் பகிர்விலும் ஓரவஞ்சனை. சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்க மாட்டார்கள். பள்ளிக் கல்விக்கான நிதியை தரமாட்டார்கள். பிரதமர் பெயரில் இருக்கின்ற மத்திய அரசுத் திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும்.
இதெல்லாம் போதாது என்று நீட், தேசியக் கல்விக் கொள்கை என்று கல்வி வளர்ச்சிக்கும் தடை, கீழடி அறிக்கைக்கு தடை, எல்லாவற்றிற்கும் மேல் தொகுதி மறுவரையறை, இப்படி தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே மத்திய அரசு வழக்கமாக செய்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டை மூன்று முறை பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் வராத, நிதி தராத மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகளுக்கெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறார்கள் என்றால் தமிழ்நாட்டு மக்கள் மீது இருக்கின்ற அக்கறையால் கிடையாது.
அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. 'இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா, இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா,' என்று பார்க்கிறார்கள். யாருடைய ரத்தத்தையாவது உறிஞ்சி உயிர்வாழத் துடிக்கின்ற ஒட்டுண்ணியாகத் தான் பா.ஜ., அரசு இருக்கிறது. மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.
ஆள் சேர்க்க பழனிசாமிக்கு அசைன்மென்ட் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு சென்று கூட்டணிக்கு ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட்டை பா.ஜ., வழங்கி இருக்கிறார்கள்.அவரோ மைக் கிடைத்தால் போதும் என்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல திட்டிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டு மக்களின் மேல் உண்மையாக அக்கறை கொண்ட யாரும் பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு சேர மாட்டார்கள். நாட்டு மக்களை துண்டாடும் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் கொள்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தும் அரசியல் முகம், அதிகார பலம் தான் பா .ஜ., அதிலும், மூன்றாவது முறை மக்களின் ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு, ஆர்.எஸ்.எஸ்., பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது பா.ஜ.,
இவர்களுடைய கொள்கை சதித் திட்டங்களுக்கு எதிராக நின்று தமிழ்நாட்டையும், மக்களையும் காக்கின்ற நம்முடைய பணி அடுத்து அமையவிருக்கும் திராவிட மாடல் 2.0-விலும் தொடரும்.மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.
வாகனங்களை ஒழுங்குப்படுத்த போதுமான போலீசார் இல்லாததால் தேவிபட்டினம் ரோட்டில் காலை 9:30மணி முதல் 11:30மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் கூட மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது.