/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி சமத்துவபுரம் சாலையில் பஸ் மறியல்
/
கடலாடி சமத்துவபுரம் சாலையில் பஸ் மறியல்
ADDED : ஜூலை 08, 2025 10:44 PM

கடலாடி; கடலாடி அருகே சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன. சமத்துவபுரத்தில் வசிக்கும் மக்களுக்கு உரிய முறையில் தண்ணீர் வினியோகம் செய்யாத நிலை பல மாதங்களாக தொடர்கிறது.
காவிரி பிரதான குழாயில் இருந்து தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டு அவற்றிலிருந்து தள்ளுவண்டி குடங்களுடன் ஏராளமானோர் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். இந்நிலையில் 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வரத்தின்றி இருந்ததால் கோபம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலை 9:00 மணிக்கு தள்ளு வண்டி குடங்களை சாலையின் குறுக்காக நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: கடலாடி சமத்துவபுரத்திற்கு காவிரி குடிநீர் முறையாக வருவதில்லை. இது குறித்து கடலாடி யூனியன் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் உரிய பதில் இல்லை. தற்போது ஊராட்சி நிர்வாகம் தனி அலுவலரின் பொறுப்பில் உள்ளது. குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும் என்றனர்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலமாக வீடுகள் தோறும் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டும் அவற்றிலும் முறையாக தண்ணீர் இன்றி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
கடலாடி -- முதுகுளத்துார் செல்லும் சாலையில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் 15 நிமிடங்கள் நின்றன. பின்னர் கடலாடி போலீசார் பொதுமக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

