/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூடப்பட்டுள்ள போலீஸ் பணியிடை பயிற்சி மையம்
/
மூடப்பட்டுள்ள போலீஸ் பணியிடை பயிற்சி மையம்
ADDED : நவ 05, 2025 08:56 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள போலீஸ் பணியிடை பயிற்சி மையம் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளது. இதனை மீண்டும் திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர்.
தமிழகம் முழுவதும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் மாவட்ட அளவில் போலீஸ் பணியிடை பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் முதல்நிலை காவலர், எஸ்.ஐ., போன்ற பதவிகளில் வரும் போலீசார் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு பெறுவர். அவ்வாறு பதவி உயர்வு பெறும் போது அவர்களுக்கான பணி திறனை மேம்படுத்தும் வகையில் அவ்வப்போது பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக குற்றங்களை தடுப்பது, குற்ற வழக்குகளை நவீன முறையில் புலனாய்வு செய்வது, குற்றம் நடந்த பகுதியில் உள்ள ஆதாரங்களை முறையாக பதிவு செய்வது, நீதிமன்ற நடவடிக்கைகளை கையாளும் முறை, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவது உள்ளிட்ட போலீசாரின் திறன் மேம்பாடு சார்ந்த பயிற்சிகள் நடத்தப்படும்.
இந்த பயிற்சி வகுப்புகள் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள், அரசு வழக்குரைஞர்கள், துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு அவ்வப்போது நடத்தப்படும். இதன் மூலம் போலீசார் திறம்பட பணியாற்ற முடியும். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள போலீஸ் பணியிடை பயிற்சி மையம் நீண்ட காலமாக செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி மையத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த போலீசார் இங்கு பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் தற்போது இந்த மையம் துாத்துக்குடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனால் இங்கிருந்து அதிக துாரம் செல்ல வேண்டி இருப்பதால் போலீசார் மன உளைச்சலில் உள்ளனர். எனவே மீண்டும் ராமநாதபுரத்தில் செயல்பட டி.ஐ.ஜி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.பி., முகாம் அலுவலகம் எதிரிலும், கலெக்டர் அலுவலகத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த அலுவலக கட்டடம் தற்போது பராமரிப்பின்றி, மின் விளக்கு கூட அணைக்கப்படாமல் பரிதாப நிலையில் உள்ளது. இங்கு டிஜிட்டல் முறையில் தரவுகளை கையாளும் முறை குறித்தும் பயிற்சி அளிக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தினர்.

