/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் குறைகளை சொல்லி கவுன்சிலர்கள் ஆவேசம்! வரி உயர்வு, சாக்கடை பிரச்னையால் மக்களிடம் அவப்பெயர்
/
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் குறைகளை சொல்லி கவுன்சிலர்கள் ஆவேசம்! வரி உயர்வு, சாக்கடை பிரச்னையால் மக்களிடம் அவப்பெயர்
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் குறைகளை சொல்லி கவுன்சிலர்கள் ஆவேசம்! வரி உயர்வு, சாக்கடை பிரச்னையால் மக்களிடம் அவப்பெயர்
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் குறைகளை சொல்லி கவுன்சிலர்கள் ஆவேசம்! வரி உயர்வு, சாக்கடை பிரச்னையால் மக்களிடம் அவப்பெயர்
ADDED : பிப் 27, 2025 12:45 AM

ராமநாதபுரம், ; ராமநாதபுரம் நகரில் பாதாள சாக்கடை பணிக்கு மாதந்தோறும் ரூ.பல லட்சம் ஒதுக்கீடு செய்தும் ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது. வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி உயர்த்தியுள்ளதால் மக்களிடம் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இப்படிஇருந்தால் 2026 தேர்தலுக்கு மக்களிடம் எப்படி ஓட்டு கேட்பது என ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க., கவுன்சிலர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் மாதந்திர கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார். கமிஷனர் அஜிதா பர்வின், துணை தலைவர் பிரவின்தங்கம் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நடந்த விவாதம்:
காளிதாஸ் (தி.மு.க.,): கூட்ட அரங்கில் மைக்செட், ஆம்ப்ளிபயர் மாற்றுவதற்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் செலவுத்தொகை அதிகம். நகராட்சி நிதியை பொறியியல் துறையினர் அதிகாரிகள் வீணடிக்கின்றனர். இந்த தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது.
தலைவர்: பொறியியில் துறையினர் விசாரித்து திட்ட மதிப்பீடு தொகை தெரிவித்துள்ளனர். இதில் முறைகேடு எதுவும் இல்லை. செலவு குறையும் என்றால் நீங்களே வாங்கி கொடுங்கள்.
நாகராஜன் (தி.மு.க.,): தொழில் வரி சீரமைப்பு என தொழில் உரிமம் கட்டணம், பாதாள சாக்கடை வரி கட்டணம் என தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். ஆண்டுக்கு 6 சதவீதம் தான் உயர்த்த வேண்டும். ஆனால் இருமடங்கு வரை உயர்த்தி வரி வசூல் செய்கின்றனர். இப்படி வசூல் செய்தால் எப்படி தேர்தல் நேரத்தில் மக்களிடம் ஓட்டு கேட்பது.
கமிஷனர்: அரசு வழிகாட்டுதலின் படி தான் வரிவசூல் நடக்கிறது. கட்டடத்தின் சதுர அடி, தொழில் வருமானம், பாதாள சாக்கடை இணைப்புகள் அடிப்படையில் வரி வசூல், உரிமம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தலைவர்: சிலர் மாடிகள் கட்டிவிட்டு கீழ்தளத்திற்கு மட்டும் வரி செலுத்துகின்றனர். அது போன்ற கட்டங்களை கமிஷனர் நேரடியாக பார்வையிட்டு அளவீடு செய்து வரி வசூல் செய்கின்றனர். இதில் முறைகேடு இருந்தால் புகார் தரலாம். வரி வசூல் செய்வதற்கு கவுன்சிலர்கள் உதவ வேண்டும்.
காளிதாஸ் (தி.மு.க.,): பாதாள சாக்கடை பராமரிப்பு பணிக்கு ரூ.28 லட்சம் என தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் சரியாக பணி செய்யவில்லை. 10வது வார்டில் 5 இடத்தில் பிரச்னை உள்ளது. வார்டுகளில் வாரம், மாதக்கணக்கில் கழிவுநீர் ஓடுகிறது. தேங்கி நிற்கிறது. மக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரை மாற்ற வேண்டும்.
இவரை தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் ரமேஷ், நாகராஜன், ஜோதிபுஷ்பம், அ.தி.மு.க., இந்திராமேரி ஆகியோர் பாதாள சாக்கடை பிரச்னையால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை என புகார் தெரிவித்தனர்.
கமிஷனர்: நகரில் பாதாள சாக்கடை பிரச்னை உள்ளது உண்மைதான். அவற்றை சரிசெய்வதற்கு தான் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. குடிநீர்வாரியம், பி.எஸ்.என்.எல்., ஓ.என்.ஜி., பதிய பாதாள சாக்கடை பணி ஆகிவற்றிற்காக குழி தோண்டும் போது குழாய் சேதமடைந்தும், அடைப்பு ஏற்பட்டு பிரச்னை வருகிறது. அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ரமேஷ்(தி.மு.க.,): வார்டில் குழி தோண்டி பணி செய்யும் போது அதுகுறித்து கேட்டால் குடிநீர் வடிகால்வாரிய ஒப்பந்தாரர் முறையாக பதில் தருவது இல்லை எனக்கூறி கூட்டத்திற்கு வந்திருந்த ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதம் செய்தார்.
தலைவர்: நகராட்சி, குடிநீர்வடிகால்வாரியம் என எந்த பணியாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலரிடம் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை தர வேண்டும்.
செல்வராணி (தி.மு.க.,) கேணிக்கரை ரோட்டை ஆக்கிரமித்து மீன்கடை வைத்துள்ளதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. அந்த கடையை உடனடியாக அகற்ற வேண்டும். கேள்வி கேட்டால் கவுன்சிலர் ஒருவர் பணம் வாங்கி விட்டதாக கூறுகின்றனர். அவரது பெயர் தெரியவில்லை, தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: மீன்கடை உள்ள பகுதி எந்த வார்டிற்கு உட்பட்டது என விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.