/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் சாரல் மழை விளைந்த நெற்பயிர் சேதம்
/
ராமநாதபுரத்தில் சாரல் மழை விளைந்த நெற்பயிர் சேதம்
ADDED : ஜன 16, 2025 04:49 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெய்து வரும் சாரல் மழையால் விளைந்த நெற்பயிர்கள் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழையால் 1.28 லட்சம் எக்டேரில் நெல் விவசாயம் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால் விளைந்த நெற்பயிர்கள் சாரல் மழையில் நனைந்து சாய்ந்து நிலத்தில் தேங்கியுள்ள நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவிட்டு பாதுகாத்து வரும் நிலையில் பருவம் தவறி பெய்யும் மழையால் பயிர்கள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை பணிகளையும் துவங்க முடியாமல், விளைந்த நெற்பயிர்களை பாதுகாக்கவும் முடியாமல் வேதனையில் உள்ளனர்.
* ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, வரவணி, வாணியக்குடி, பூலாங்குடி, எட்டியத்திடல் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நெல் அறுவடை நடக்கிறது.
இந்நிலையில் இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் அறுவடை வயல்களில் அறுவடை இயந்திரங்கள் செல்ல முடியாத வகையில் ஈரப்பதம் நிலவுகிறது.
மேலும், அறுவடை தருவாயில் நெற்கதிர்களும் மழை நீரில் நனைந்து சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.