/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
'கரிப் ரத்' ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
/
'கரிப் ரத்' ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
'கரிப் ரத்' ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
'கரிப் ரத்' ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வலியுறுத்தல்
ADDED : அக் 10, 2025 09:37 PM
ராமநாதபுரம்:டில்லி --சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் 'கரிப் ரத்' ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தினர்.
தொலைதுார நகரங்களுக்கு குறைந்த விலையில் ஏ.சி., வகுப்பில் பயணிப்பதற்காக 2005 ல் கரிப் ரத் எனும் ரயில் சேவை துவக்கப்பட்டது. இந்த ரயில் தற்போது பனாரஸ், கயா, புரி, காத்கோடம் (உத்ரகாண்ட்), முசாபர்பூர், சஹர்சா உள்ளிட்ட ஆன்மிக தலங்களுக்கும், கோல்கட்டா, டில்லி, மும்பை நகரங்களில் இருந்து பிற மாநிலங்களின் தலைநகர்களுக்கும் இயக்கப்படுகின்றன.
டில்லியில் இருந்து வாரந்தோறும் திங்கள் கிழமை புறப்படும் கரிப் ரத் ரயில் செவ்வாய்க்கிழமை சென்னை சென்ட்ரல் வந்தடையும். மறு மார்க்கமாக சென்னையில் இருந்து சனிக்கிழமை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை டில்லி சென்றடையும்.
மீதமுள்ள நாட்களில் பண்டிகை கால சிறப்பு ரயிலாக இயக்குகின்றனர். தற்போது சிறப்பு ரயிலாக சென்னை - கோட்டயம் இடையே இயக்கப்படுகிறது. சீசன் முடிந்தபின் இந்த ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்கினால் டில்லி--ராமேஸ்வரம் இடையே நேரடி ரயில் சேவை கிடைக்கும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறியதாவது: சென்னையில் இருந்து டில்லி செல்லும் தமிழ்நாடு விரைவு ரயில், ஜி.டி., விரைவு ரயில்களை விட 5 மணி நேரம் முன்னதாக கரிப் ரத் ரயில் செல்கிறது. குறைந்த கட்டணத்தில் விரைவாக டில்லி செல்ல விரும்புவோர் அதிகம் தேர்ந்தெடுப்பது கரிப் ரத் ரயிலை தான். சென்னையில் இருந்து புறப்படும் இந்த ரயிலை நாமக்கல் வழியாக ராமேஸ்வரம் வரை நீட்டித்து இயக்கினால் டில்லியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு நேரடி ரயில் சேவை கிடைக்கும். வட மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வர விரும்பும் ஆன்மிக பயணிகள் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்றனர்.