ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 22, 2026 05:31 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் ஆய்வு செய்தார்.
ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் ஏ.மணக்குடி சுனாமி காலனியில் 197 குடும்பங்கள் வசிக்கின்றனர். அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்திருந்தனர். அதைத் தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் காவிரி கூட்டு குடிநீர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 47 வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மேலும், அப்பகுதியில் மும்முனை மின் இணைப்பு தரம் உயர்த்தப்பட்டு ரூ.11.75 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டதையும் கலெக்டர் ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து சோழியக்குடி மீன் ஏலக்கூடம், செட்டிப் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் கடலுார் ஊராட்சி மோர்ப்பண்ணை கிராமத்தில் குறுங்காடு அமைக்கும் பணிகளையும், திருப்பாலைக்குடியில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடப் பணிகளின் தரத்தையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து காந்திநகர் பகுதியில் ரூ.16.45 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய பணிகளை கலெக்டர் பார்வையிட்டு விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
