/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் இழுத்தடிப்பு ; ஆறு ஆண்டாக நடப்பதால் பக்தர்கள், மக்கள் அவதி
/
ராமேஸ்வரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் இழுத்தடிப்பு ; ஆறு ஆண்டாக நடப்பதால் பக்தர்கள், மக்கள் அவதி
ராமேஸ்வரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் இழுத்தடிப்பு ; ஆறு ஆண்டாக நடப்பதால் பக்தர்கள், மக்கள் அவதி
ராமேஸ்வரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் பணிகள் இழுத்தடிப்பு ; ஆறு ஆண்டாக நடப்பதால் பக்தர்கள், மக்கள் அவதி
ADDED : டிச 11, 2024 04:57 AM

ராமேஸ்வரம்: புண்ணிய தலமான ராமேஸ்வரத்தில் ஆறு ஆண்டுகளாக பாதாள சாக்கடை பணிகள் இழுத்தடிக்கப்பட்டு மந்தமாக நடப்பதால் கழிவுநீர் தொட்டிகளில் மூடிகள் உடைந்து கிடப்பதால் பக்தர்கள், நகராட்சி மக்களுக்கு விபரீதம் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ராமேஸ்வரத்தில் ரூ.52.60 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 2019ல் துவங்கியது. இங்குள்ள 21 வார்டுகளில் கோயில் நான்கு ரதவீதி, திட்டக்குடி, நடுத்தெரு, ரயில்வே பீடர் ரோடு, வேர்க்கோடு, மார்க்கெட் தெரு உள்ளிட்ட 13 வார்டுகளின் முக்கிய தெருக்களில் பாதாள சாக்கடை பணிக்கு ரோட்டில் தோண்டி குழாய், கழிவு நீர் தொட்டி அமைத்தனர்.
மேலும் பாதாள சாக்கடை குழாயில் வரும் திடக்கழிவு நீரை சேகரிக்க ஓலைக்குடா சங்குமால் கடற்கரையில் உறிஞ்சும் கிணறு நிலையம், இங்கிருந்து திடக்கழிவு நீரை 4 கி.மீ., கடத்தி சுத்திகரிக்க ஓலைக்குடா நரிக்குழி என்ற இடத்தில் சுத்திகரிப்பு நிலையமும் அமைத்தனர்.
இழுத்தடிப்பு
இப்பணிகள் துவங்கி தற்போது வரை 6 ஆண்டுகள் முடியும் நிலையில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மந்தமாக நடக்கிறது. இத்திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் துரித நடவடிக்கை இல்லை. ஒருவேளை அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கியதால் அலட்சியமாக உள்ளனரா என மக்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் கோயில் அக்னி தீர்த்த சாலை, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை நடுவில் பல இடங்களில் பாதாள சாக்கடை தொட்டிகளின் மூடிகள் உடைந்து பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வழியாக தினமும் ஏராளமான வாகனத்தில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் வாசிகள் டூவீலரில் சென்று வரும் நிலையில் பள்ளத்தில் சிக்கி விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து நகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் மக்கள் முறையிட்டும் கண்டு கொள்ளாமல் உடைந்த மூடி அருகில் இரும்பு தடுப்பு வேலி அமைத்து போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.
சேதமடையும் அபாயம்
ஆறு ஆண்டுகளாக நடக்கும் பணியால் ஏற்கனவே சாலையில் அமைத்த தொட்டிகள், சுத்திகரிப்பு நிலைய இயந்திரங்கள், உதிரி பாகங்கள் செயல்படாமல் முடங்கி கிடப்பதால் வீணாகும் அபாயம் உள்ளது. இப்பணிகள் மேலும் இழுத்தடிக்கப்பட்டால் அரசு நிதி ரூ.52.60 கோடியும் வீணாகும் அவல நிலை உள்ளது.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 2020ல் கொரோனா தடை, சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு போன்ற காரணங்களால் திட்டப் பணிகள் சற்று தள்ளிப்போனது. இன்னும் ஒரு சில மாதங்களில் பணிகள் முடிக்கப்பட்டு திட்டம் செயல்படும் என்றார்.