/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமர் பாதம் கோயில் கட்ட நிதி ஒதுக்கவில்லை கவலையில் பக்தர்கள்
/
ராமர் பாதம் கோயில் கட்ட நிதி ஒதுக்கவில்லை கவலையில் பக்தர்கள்
ராமர் பாதம் கோயில் கட்ட நிதி ஒதுக்கவில்லை கவலையில் பக்தர்கள்
ராமர் பாதம் கோயில் கட்ட நிதி ஒதுக்கவில்லை கவலையில் பக்தர்கள்
ADDED : பிப் 14, 2025 07:07 AM
திருவாடானை: தொண்டி அருகே ராமர் பாதம் கோயில் கட்டப்படும் என்று சுற்றுலாத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
தொண்டி அருகே புல்லக்கடம்பன் ஊராட்சி இடையான்வயல் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமர் பாதம் கோயில் உள்ளது. ராமபிரான் சீதையை தேடி இந்த வழியே சென்ற போது இங்கு குடில்கள் அமைத்து இளைப்பாறினார். அதன் நினைவாக மன்னர்கள் ராமர் பாதம் அமைத்து கோயில் கட்டியுள்ளனர்.
தீர்த்தாண்டதானம் வள்ளிநாயகம், ராமர் பாதம் கோயில் பூஜாரி கந்தன் கூறியதாவது: ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு இப்பகுதியில் பல்வேறு இடங்களில் தங்கி சென்றுள்ளார். தீர்த்தாண்டதானத்தில் அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்துள்ளார். இதற்கு ஆதாரமாக தீர்த்தாண்டதானம் கோயில் முன்பு ஊருணிக்கரையில் அகத்தியர் சிலை உள்ளது. அதே போல் ராமர் பாதம் கோயில் இருந்துள்ளது.
தற்போது இக்கோயில் சிதிலமடைந்துள்ளது. இக்கோயில் கட்ட சுற்றுலாத்துறை சார்பில் ரூ.2 கோடியே 99 லட்சம் நிதியில் கோயில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 16 ஏக்கர் கொண்ட இக்கோயிலை சுற்றி அடர்ந்திருந்த சீமைக்கருவேலம் செடிகளை சில ஆண்டுகளுக்கு முன்பு புல்லக்கடம்பன் ஊராட்சி சார்பில் அகற்றபட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இப்பகுதியில் முதல் முறையாக ராமர் கோயில் அமைய இருப்பதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நிதி ஒதுக்காததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோயில் திடலில் அமர்ந்து மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

