UPDATED : அக் 24, 2026 05:59 PM
ADDED : அக் 24, 2026 05:54 PM
கீழக்கரை: கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சி அலவாய்க்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம் பகுதிகளில் 2015க்கு பிறகு பைப்புகளில் தண்ணீரின்றி காட்சிப் பொருளாக உள்ளது.
அலவாய்க்கரைவாடி, லட்சுமிபுரம், சிவகாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். வீடுகள் தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 25 ஆயிரம் லி., குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாடின்றி உள்ளது. அலவாய்க்கரைவாடியை சேர்ந்த தன்னார்வலர் முனியசாமி கூறியதாவது:
ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட குடிநீர் பைப் லைனில் தண்ணீர் வினியோகம் செய்யாமல் காட்சி பொருளாக உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்திற்காக அமைக்கப்பட்ட குடிநீர் பைப்புகளும் தண்ணீரின்றி உள்ளது. இதனால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது. குடம் தண்ணீரை ரூ.10க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் திருப்புல்லாணி யூனியன் நிர்வாகத்தினர் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வரத்து இல்லாத நிலையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளோம் என்றார்.
