/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க.,வின் தைரியம்: சீமான் கேள்வி
/
தி.மு.க.,வின் தைரியம்: சீமான் கேள்வி
ADDED : செப் 20, 2024 02:20 AM

ராமநாதபுரம்:''கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்குதர மறுக்கும் தி.மு.க., போன்ற திராவிட கட்சிகளுக்கு தேர்தலில் தனித்து போட்டியிட தைரியம் உள்ளதா'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
ராமநாதபுரத்தில் நடந்த அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
த.வெ.க., கட்சி துவங்கியுள்ள விஜய் ஈ.வே.ரா.,க்கு மாலை அணிவித்ததை திராவிட அரசியல் எனக்கூற முடியாது. கட்சி கொள்கையை விஜய் தான் விளக்கமாக சொல்ல வேண்டும். மதுவிலக்கு மாநாட்டை கூட்டணியில் இருந்து கொண்டு வி.சி., கட்சி நடத்தலமா என்கின்றனர். மதுவை ஒழிக்க போராட அவர்களுக்கும் உரிமை உள்ளது.
அவர்கள் ஆட்சியில் பங்கு கேட்பதும் சரிதான். வி.சி., கம்யூ., ம.தி.மு.க., முஸ்லிம் கட்சிகளுக்கு ஓட்டுகள் ஒன்றும் இல்லையா. அப்படி நினைத்தால் தி.மு.க.,வினர் தேர்தலில் தனித்து நின்று வெல்ல வேண்டியது தானே. மேலும் தி.மு.க., 18 ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சரவையில் பங்குபெற்றது மட்டும் சரியா.
தி.மு.க., ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டாஸ் போட்டனர். கள்ளச்சாராயம், கஞ்சா விற்பதில்போலீசுக்கு மட்டும் தொடர்பு இல்லை. அரசுக்கு தெரியாமல் நடக்காது. தமிழக மீனவர்களை இலங்கையில் சுடுகின்றனர். படகுகளை பறிமுதல் செய்கின்றனர். மீனவர்களை மொட்டையடித்தது இந்தியாவிற்கே பெரிய அவமானம். பல லட்சம் மக்களை திரட்டி கட்சி மாநாடு நடத்துகின்றனர். கச்சத்தீவு உரிமையை மீட்க போராடலாம்.அப்படி செய்தால் தி.மு.க., ஆட்சியை கலைத்து விடுவார்கள் என பயப்படுகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் எனக்கு பிடிக்காது. அதை மத்திய அரசு சொல்லக்கூடாது. மக்கள் சொல்ல வேண்டும். அதுதான் தேசப்பற்று.25 ஆண்டுகளாக அந்நிய முதலீடு பெறுகின்றனர். வேலைவாய்ப்பு பிரச்னை தீரவில்லை.
எனக்கு கூட்டுப்பொரியல் பிடிக்கும். கூட்டணி பிடிக்காது. தனித்துதான் போட்டியிடுவேன் என்றார்.