ADDED : செப் 28, 2024 06:25 AM
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் துாறல் மழையுடன் மேகக் கூட்டங்கள் கலைந்து சென்றதால் நெல் விதைப்பு செய்து காத்திருக்கும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை தாலுகாக்களில் ஆண்டுதோறும் 52 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை தாலுகாக்களுக்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நெல் விதைப்பு துவங்கியது.
வானம் பார்த்த பூமியான இந்தப் பகுதியில் விவசாயிகள், பருவ மழையை எதிர்பார்த்து நேரடி நெல் விதைப்பு செய்தனர். விதைப்பு செய்த பின் தொடர்ந்து மழை இல்லாததால் பறவைகளுக்கு உணவாகி வருவதுடன், விதைகளின் முளைப்புத் திறன் பாதிப்படைந்துள்ளது.
நேற்று மதியம் 2:00 மணிக்கு மேல் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மேகக் கூட்டங்கள் தென்பட்டதால் விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.
லேசான துாறல் மழை பெய்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.