/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி, கல்லுாரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
பள்ளி, கல்லுாரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பள்ளி, கல்லுாரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பள்ளி, கல்லுாரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 26, 2025 10:43 PM

ராமநாதபுரம்; மாவட்ட நிர்வாகம் சார்பில் ராமநாதபுரத்தில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரண்மனை அருகே விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், தாசில்தார்கள், போலீசார், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விழிப்புணர்வு ஊர்வலத்தை சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதி மெகபூ அலிகான் துவக்கி வைத்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணபாபு மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
*ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தகவல் தொழில் நுட்பத் துறைத்தலைவர் வினோத் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் சார்பு நீதிபதி சரவண பாபு 'போதை இல்லா பொன்னான தமிழகம்' என்ற தலைப்பில் பேசினார். வழக்கறிஞர் சந்தோஷ் திருக்குறளில் கள்ளுண்ணாமை அதிகாரத்தை விளக்கி பேசினார்.
மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராஜாத்தி வாழ்த்து தெரிவித்தனர். நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா பங்கேற்றனர். தமிழ்துறை உதவிப்பேராசிரியர் சுந்தரபாண்டியன் நன்றி கூறினார்.
*ராமநாதபுரம் அருகே வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் சகுந்தலா விழாவை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக செல்வபாண்டியன், புவுல்சாமி, டாக்டர் ேஹமபிரித்தியா ஆகியோர் பங்கேற்றனர். போதைப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவிகள் உட்பட அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.
*ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஞானலெட்சுமி சொர்ணகுமாரி தலைமை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் செல்வக்குமார் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
* ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் அன்னை ஸ்கொலாஸ்டிகா பெண்கள் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். தங்கச்சிமடத்தில் அன்னை ஸ்கொலஸ்டிகா பெண்கள் கல்லுாரி, தங்கச்சிமடம் நுகர்வோர் பாதுகாப்பு மையம் இணைந்து உலக போதை ஒழிப்பு தினத்தையொட்டி நேற்று தங்கச்சிமடம் ஆட்டோ ஸ்டாண்ட் முதல் தர்கா ஸ்டாப் வரை கல்லுாரி முதல்வர் ஆனிபெர்பெட் சோபி தலைமையில் மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
ஊர்வலத்தில் போதை ஒழிப்பும், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை மாணவிகள் ஏந்தி சென்றனர். ஊர்வலத்தை ராமேஸ்வரம் தாசில்தார் அப்துல்ஜபார் துவக்கி வைத்தார். இதில் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி தர்மபுத்திரன், என்.எஸ்.எஸ்., அலுவலர் மங்களேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.
*முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வழிபாட்டுக்கூடத்தின் போது உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது.
பள்ளி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். பின் ராமநாதபுரம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தின் ஆற்றுப்படுத்துநர் பெஸ்கி பிரபு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் விளைவுகள் குறித்து விளக்கினார்.
*கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் என்.சி.சி., மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் சேக் தாவூது தலைமை வகித்தார். துணை முதல்வர் கணேஷ் குமார் முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட போதை ஒழிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் பங்கேற்று போதை பொருளால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் மற்றும் தீமைகள் பற்றி காணொளி காட்சிகளின் மூலமாக விளக்கிக் கூறினார்.
ஏராளமான மாணவர்கள் பங்கேற்று போதை பொருள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்தனர். ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் மருதாச்சலமூர்த்தி மற்றும் என்.எஸ்எஸ்., திட்ட அலுவலர் ராஜேஷ் கண்ணா செய்திருந்தனர்.