/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி வைகை ஆற்றில் முதியவர் அடித்து கொலை
/
பரமக்குடி வைகை ஆற்றில் முதியவர் அடித்து கொலை
ADDED : நவ 18, 2025 07:05 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வைகை ஆற்றில் வேலு 70, என்பவரை அடித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பரமக்குடி நகராட்சி மஞ்சள்பட்டணத்தில் மூக்கன் என்பவரது தென்னந்தோப்பு உள்ளது. இங்கு கீழகன்னிசேரி கிராமம் லட்சுமணன் 70, காவலாளியாக உள்ளார். நேற்று மாலை 6:30 மணிக்கு லட்சுமணன், மூக்கனின் உறவினர் பிரண்டை குளம் கிராமம் வேலு 70, ஆகிய இருவரும் பேசிய படி, மணிநகர் ஆர்.டி.ஓ., அலுவலகம் பின்புறம் வைகை ஆற்றோரம் நடந்து வந்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் திடீரென லட்சுமணன், வேலுவை அரிவாளால் வெட்டி தாக்கினர். இதில் வேலு சம்பவ இடத்திலேயே பலியானார். லட்சுமணன் காயத்துடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரமக்குடி எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், இளைஞர்கள் சிலர் தென்னந்தோப்பு பகுதியில் மது அருந்தி உள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பிரச்னை காரணமாக முதியவர்களை தாக்கி கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளது. அப்பகுதி சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம், என்றனர்.

