UPDATED : அக் 12, 2026 08:11 PM
ADDED : அக் 12, 2026 08:06 PM
சிக்கல்: சிக்கல் பாசன பெரிய கண்மாயில் முதலாவது மடையை கட்ட வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், ஆண்டிச்சிகுளம் கிராம மக்கள் இணைந்து ஆர்.ஐ., அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் கண்மாயை ஆய்வு செய்த பாசனத்துறை அதிகாரிகள் மடை கட்டித் தரப்படும் என உறுதிமொழி அளித்ததால் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இரண்டு மாதம் கழித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலட்சியத்தால் இன்று வரை கட்டுமானப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து நேற்று காலை கிராம மக்கள் மற்றும் சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் பச்சமால், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்ட குழுவினர் கூறியதாவது:
தற்போது மழை துவங்கி உள்ள நேரத்தில் மடைகளை முகப்பு பகுதிகளை உடைத்து விட்டு அப்படியே கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் தண்ணீர் அனைத்தும் வீணாகி இதம்பாடல் கண்மாய் வழியாக கடலில் கலந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் அக்., 15ல் சிக்கலில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.
