/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் குமுறல்: சாகுபடி பணிகளை துவங்குவதில் சிக்கல்
/
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் குமுறல்: சாகுபடி பணிகளை துவங்குவதில் சிக்கல்
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் குமுறல்: சாகுபடி பணிகளை துவங்குவதில் சிக்கல்
பயிர் காப்பீட்டு தொகை வழங்காததால் விவசாயிகள் குமுறல்: சாகுபடி பணிகளை துவங்குவதில் சிக்கல்
ADDED : ஆக 22, 2024 02:35 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-24ல் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குரிய காப்பீட்டுத்தொகை கிடைக்காமல் வாங்கிய கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் சாகுபடி பணிகளையும் துவங்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் மானாவாரியாக 1 லட்சத்து 28 ஆயிரம் எக்டேரில் ஆண்டுதோறும் நெல்சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி அக்.,க்கு முன்னதாகவே வயலை தயார் செய்து நெல் விதைக்கின்றனர்.
தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, தேவிப்பட்டினம், சத்திரக்குடி, நயினார்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் நெல் விதைப்பிற்காக வயலை டிராக்டரில் உழுது தயார் செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 2023-24ம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை கிடைக்காததால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும், சாகுபடி பணியை துவங்கவும் முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் செங்குடி குரூப் விவசாயிகள் ராஜா, சேவியர், அருள்சூசை ஆகியோர் கூறியதாவது:
வரவணி, செங்குடி குரூப்பில் மட்டும் 400 ஏக்டேரில் நெல் சாகுபடி செய்கிறோம். 2023-24 சாகுபடியில் பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் கருகியும், அழுகியும் வீணாகிவிட்டது. உழவு, விதைப்பு, உரம், மருந்து, கூலி என ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் செலவழித்தும் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக வேளாண் அதிகாரிகள், வருவாய்துறையினர் நேரடியாக வந்து கள ஆய்வு செய்தனர். இதில் செங்குடி, வரவணி குரூப் விவசாயிகளுக்கு இதுவரை பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. எங்களை போல விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால் வரும் என கூறுகின்றனர். கூட்டுறவு கடன் சங்கங்களில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியவில்லை. நடப்பாண்டு சாகுபடிக்கும் செலவழிக்க பணமின்றி சிரமப்படுகிறோம். எனவே பயிர் காப்பீட்டு தொகை உடனடியாக வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என்றனர்.----