/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.30 கோடிக்கு உரம், பூச்சி மருந்து விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி
/
ரூ.30 கோடிக்கு உரம், பூச்சி மருந்து விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி
ரூ.30 கோடிக்கு உரம், பூச்சி மருந்து விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி
ரூ.30 கோடிக்கு உரம், பூச்சி மருந்து விற்பனை: வியாபாரிகள் மகிழ்ச்சி
ADDED : டிச 29, 2025 06:45 AM
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கடந்த ஆண்டை காட்டிலும் ஒரு மடங்கு கூடுதலாக ரூ.30 கோடிக்கு உரம், பூச்சி மருந்து விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பயிர்கள் வளர்ச்சி ஒரே சீராக இருக்கவும், அதிக மகசூல் எடுக்கவும், நுண்ணுாட்ட உரங்கள் இடுவது வழக்கம்.
உரம் இடுவதன் மூலம் பயிர் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திகழ்கிறது. இந்த ஆண்டு போதிய மழை பெய்ததால் உரமிடுதல், களை பறித்தல் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
திருவாடானை, தொண்டி, சின்னக்கீரமங்கலம், எஸ்.பி.பட்டினம், நம்புதாளை, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல ஊர்களில் தனியார் உர வியாபாரிகள் உள்ளனர். இது தவிர திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 33 கூட்டுறவு சங்கங்களும் உள்ளன. இந்த ஆண்டு தக்க நேரத்தில் மழை பெய்ததால் முதல் கட்டமாக அடி உரமிட்டனர்.
ஆனால் உரமிட்ட பிறகு மழை பெய்யாததால் பயிர்கள் கருகத் துவங்கியது. அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் மீண்டும் உரமிடும் பணி நடந்தது. இதனால் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உரம் விற்பனை ஆகியுள்ளது. உரம், பூச்சி மருந்து விலையும் உயர்ந்ததால் ஒரு மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாக்களில் ரூ. 30 கோடி வரை உரம், பூச்சி மருந்து விற்பனை ஆகியுள்ளது. யூரியா போன்ற உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், பிறகு போதுமான அளவு சப்ளை செய்யப்பட்டதால் விவசாயிகள் ஆர்வமாக உரங்களை வாங்கினர். கடந்த ஆண்டைக் காட்டிலும் ஒரு மடங்கு அதிகமாக விற்பனை ஆகியுள்ளது என்றனர்.

