/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மேல முந்தலில் துாண்டில் மூலம் பிடிக்கப்படும் முதல் தர சீலா மீன் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்
/
மேல முந்தலில் துாண்டில் மூலம் பிடிக்கப்படும் முதல் தர சீலா மீன் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்
மேல முந்தலில் துாண்டில் மூலம் பிடிக்கப்படும் முதல் தர சீலா மீன் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்
மேல முந்தலில் துாண்டில் மூலம் பிடிக்கப்படும் முதல் தர சீலா மீன் வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றனர்
ADDED : நவ 22, 2025 02:46 AM
சாயல்குடி: கடந்த மாதத்தில் இருந்து சீலா மீன் சீசன் துவங்கியுள்ளதால் பிடிபடும் மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சாயல்குடி அருகே உள்ள மேலமுந்தல் மன்னார் வளைகுடா கடற்கரையில் நுாறுக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. கடலில் 20 முதல் 30 நாட்டிக்கல் மைல் தொலைவிற்கு செல்லக் கூடிய மீனவர்கள் தற்போது சீலா மீன் சீசன் தொடங்கியதை அடுத்து அவற்றை துாண்டில் மூலம் பிடிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிகாலை 5:00 மணிக்கு பைபர் படகில் தொழிலுக்கு செல்லும் மீனவர்கள் சீலா மீன்களை துாண்டில் போட்டு பிடித்து தெர்மாகோல் பெட்டியில் ஐஸ் நிரப்பப்பட்டு முறையாக அவற்றை பதப்படுத்தி மாலை 6:00 மணிக்கு கரைக்கு திரும்புகின்றனர்.
மேலமுந்தலா கடற்கரைக்கு ஏலம் எடுக்கக்கூடிய மீன் வியாபாரிகள் மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை காத்திருந்து மீன்களை வாங்கி செல்கின்றனர். மீன் வியாபாரிகள் கூறியதாவது:
ஒரு கிலோ முதல் 3 கிலோ வரை உள்ள மீன்கள் கிலோ ரூ.600க்கும், 3 கிலோவில் இருந்து 5 கிலோ எடை கொண்ட மீன்கள் ரூ.750க்கும், 6 கிலோவில் இருந்து 30 கிலோ வரை எடை கொண்ட மீன்கள் கிலோ ரூ. 900 வீதம் நிர்ணயிக்கப்படுகிறது.
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக 40 கிலோ எடை கொண்ட பெரிய அளவிலான சீலா மீன்கள் அதிகளவு சிக்குகின்றன.
அவற்றை முறையாக சாயல்குடியில் உள்ள மீன் கம்பெனிகளில் பதப்படுத்தி ஆஸ்திரேலியா, கனடா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதிக்காக வெளியூர் வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.
கிறிஸ்துமஸ் சீசனுக்கு அதிகளவு வாங்கி அனுப்பப்படுகின்றன.
இப்பகுதியில் பிடிபடக்கூடிய சீலா மீன் அதிக சுவை கொண்டதாக இருப்பதால் இதன் மகத்துவம் அறிந்து வாங்கி செல்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரக்கூடிய மீன் வியாபாரிகள் துாண்டில் மூலம் பிடிக்கக்கூடிய சீலா மீன்களை ஆர்வமுடன் பெற்று விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர் என்றனர்.
பொதுவாக ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் மழை காலங்களை ஒட்டிய நாட்களில் அதிகளவு சீலா மீன்கள் பிடிபடும்.

