/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த மீனவர்கள்
/
கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த மீனவர்கள்
ADDED : பிப் 24, 2024 12:30 AM

ராமேஸ்வரம்:இலங்கையில் ஐந்து மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்து, நேற்றும் இன்றும் நடக்கும் கச்சத்தீவு விழாவை புறக்கணித்தனர்.
பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் கச்சத்தீவு விழாவுக்கு செல்வோருக்கு தடை விதித்தது. 'தடையை மீறி கச்சத்தீவுக்கு செல்வோம்' என, நாட்டுப்படகு மீனவர்கள் சிலர் தெரிவித்தனர்.
இதனால், நேற்று காலை முதல் 500 போலீசார் ராமேஸ்வரம் துறைமுகம் வீதி, படகுகள் நிறுத்தும் பாலம், ஓலைக்குடா, பாம்பன் கடற்கரையில் குவிக்கப்பட்டனர். தடையை மீறி, கச்சத்தீவு விழாவிற்கு ஒருவர் கூட செல்லவில்லை; அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.
எதிர்பார்த்து கடற்கரையில் வெகுநேரம் காத்திருந்த போலீசார், மதியம், 3:00 மணிக்கு பின் திரும்பினர்.
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல, பெங்களூருவில் இருந்து பதிவு செய்திருந்த 40 பக்தர்கள் நேற்று காலை ராமேஸ்வரம் வந்தனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் பிறகே தடை குறித்து தெரிந்ததால், ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினர்.
இதற்கிடையே, பாக் ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இலங்கையில் இருந்து 2,000 பக்தர்கள் பங்கேற்றனர். தமிழக பக்தர்கள் பங்கேற்காததால், கச்சத்தீவு திருவிழா வெறிச்சோடி இருந்ததாக இலங்கை பக்தர்கள் தெரிவித்தனர்.