/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் கஜானாவை காலி செய்து வைத்துள்ளனர் முன்னாள் தலைவர்கள் வேதனையில் ஊராட்சி செயலாளர்கள்
/
ஊராட்சிகளில் கஜானாவை காலி செய்து வைத்துள்ளனர் முன்னாள் தலைவர்கள் வேதனையில் ஊராட்சி செயலாளர்கள்
ஊராட்சிகளில் கஜானாவை காலி செய்து வைத்துள்ளனர் முன்னாள் தலைவர்கள் வேதனையில் ஊராட்சி செயலாளர்கள்
ஊராட்சிகளில் கஜானாவை காலி செய்து வைத்துள்ளனர் முன்னாள் தலைவர்கள் வேதனையில் ஊராட்சி செயலாளர்கள்
ADDED : ஜன 19, 2025 04:53 AM
சிக்கல்: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊராட்சிகளில் நிர்வாகம் செய்த ஊராட்சி தலைவர்கள் பெரும்பாலான ஊராட்சிகளில் பொது நிதியை வளர்ச்சி திட்டப் பணிகளுக்காக செலவழித்து குறைந்த அளவு தொகையை மிச்சம் வைத்துள்ளதாக ஊராட்சி செயலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், கடலாடி, திருப்புல்லாணி, கமுதி, முதுகுளத்துார், பரமக்குடி, போகலுார், நயினார்கோவில், ஆர்.எஸ். மங்கலம், திருவாடனை உள்ளிட்ட 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 429 ஊராட்சிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊராட்சித் தலைவர்கள் நிர்வாகம் செய்து வந்தனர்.
ஜன.,5க்கு பிறகு ஊராட்சியில் உள்ள பொது நிதியை குறைந்த அளவிலேயே இருப்பு வைத்துவிட்டு அதிகபட்ச தொகையை திட்ட பணிகளுக்காக செலவிட்டுள்ளனர்.
தனி அலுவலர்கள் நிர்வாகத்தில் இருந்து வரும் நிலையில் ஊராட்சியில் உள்ள (கஜானா) பொதுநல நிதி கணக்கை உரிய தொகை இல்லாமல் வைத்துள்ளனர்.
கிராம மக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய குடிநீர், மின்மோட்டார் பழுது, மின்சார பராமரிப்பு, தளவாடப் பொருட்கள் வாங்குதல் உள்ளிட்டவைகளுக்காக உரிய தொகை இன்றி சிரமத்தை சந்திக்கின்றனர். ஊராட்சி செயலாளர் ஒருவர் கூறியதாவது:
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊராட்சி நிர்வாகத்தை வழி நடத்திய ஊராட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை கூட வைக்காமல் காலி செய்துள்ள போக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
இதனால் அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட பொருட்கள் வழங்கக் கூடிய நிறுவனங்களிடம் கடன் வாங்கியும், சொந்த நிதியை பயன்படுத்தியும் நிர்வாகத்தை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.
ஊராட்சியில் உள்ள பி.டி.ஓ.,க்கள் சம்பந்தப்பட்ட வேலையை பாருங்கள் என வாய்மொழி உத்தரவிடுகின்றனர்.
ஆனால் அதற்கான தொகையை எவ்வாறு ஈடுகட்ட போகிறீர்கள் என்ற விஷயத்தை கூற மறுக்கின்றனர்.
இதனால் கடன் வாங்கியும் செலவழிக்க வேண்டிய மன உளைச்சலில் உள்ளோம்.
ஜன.26ல் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. அச்சமயத்தில் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டை தவிர்க்க கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடிய வயதில் மூத்த பெரியவர்கள் தலைமையில் கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அச்சமயத்தில் பொதுமக்கள் வைக்கும் அத்தியாவசிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக உரிய அத்தியாவசிய திட்ட நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
பெரும்பாலான ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்களை பலிகடா ஆக்காமல் இருந்தால் சரி. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல் தேவை.