/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நான்கு ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைப்பு
/
நான்கு ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைப்பு
ADDED : ஜன 02, 2025 11:24 PM

பரமக்குடி; பரமக்குடி நகராட்சியுடன் 4 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம எல்லைகளை இணைத்து நகராட்சியை விரிவுபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி துணை மாவட்டமாக செயல்படுகிறது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 96 ஆயிரம் பேர் இருந்தனர். 2024ம் ஆண்டில் மக்கள் தொகை ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேரை கடந்துள்ளது.
இந்நிலையில் பரமக்குடி மற்றும் வைகை ஆற்றின் மறுபுறமுள்ள எமனேஸ்வரம் பகுதிகளை இணைத்து 1964ல் நகராட்சியாக உருவானது. காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் கால் பதித்த இங்கு கைத்தறி நெசவு தொழில் பிரதானமாக உள்ளதுடன், குண்டு மிளகாய் விளைச்சலுக்கு பெயர் பெற்றது.
தொடர்ந்து நகரை விரிவுபடுத்தும் நோக்கில் ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் பரமக்குடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கு 2024 ஜன. 20ல் கடிதம் அளிக்கப்பட்டது. இதன்படி நான்கு ஊராட்சிகளை தற்போது நகராட்சியுடன் இணைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் தெளிசாத்தநல்லுார் ஊராட்சியில் மூவேந்தர் நகர், சிட்கோ, நேரு நகர், திருநகர், வ.உ.சி., நகர், சக்தி நகர், கனிநகர் உள்ளது. அண்டக்குடி ஊராட்சியில் பாம்புவிழுந்தான், ராஜிவ் நகர், பர்மா காலனி இணைக்கப்பட்டுள்ளது.
வேந்தோணி ஊராட்சியில் மரைக்காயர்பட்டினம், உலகநாதபுரம், சரஸ்வதி நகர், காமாட்சிபுரம், வேந்தோணி (வார்டு 5) உள்ளது. உரப்புளி ஊராட்சியில் சுந்தர் நகர் வார்டு 1, 2, 3 மற்றும் 4, தண்டராதேவிபட்டினம் (வார்டு 4) ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பரமக்குடி நகராட்சியில் மக்கள் தொகை அதிகரிக்கும் நிலையில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளுக்கு திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுவதுடன், வார்டு வரையறை செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் முத்துசாமி தெரிவித்தார்.