/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏற்றுமதி அனுமதி சான்றிதழ்கள் செலவிற்கு விவசாயிகளுக்கு ரூ.15,000 அரசு மானியம்
/
ஏற்றுமதி அனுமதி சான்றிதழ்கள் செலவிற்கு விவசாயிகளுக்கு ரூ.15,000 அரசு மானியம்
ஏற்றுமதி அனுமதி சான்றிதழ்கள் செலவிற்கு விவசாயிகளுக்கு ரூ.15,000 அரசு மானியம்
ஏற்றுமதி அனுமதி சான்றிதழ்கள் செலவிற்கு விவசாயிகளுக்கு ரூ.15,000 அரசு மானியம்
ADDED : ஜூலை 16, 2025 11:24 PM
ராமநாதபுரம்: வேளாண் வணிகத் துறை சார்பில் விவசாயிகள்,உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் விளைப்பொருட்களை ஏற்றுமதிக்கு சான்றிதழ் பெற ரூ.15 ஆயிரம் வரை அரசு மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலிருந்து வேளாண் விளை பொருட்களான பாசுமதி அல்லாத அரிசி, நிலக்கடலை, பதப்படுத்தப்பட்ட பழங்கள், பழச்சாறுகள், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, மாம்பழக்கூழ், வெள்ளரி, வெங்காயம், வெல்லம்,மக்காச்சேளம், காய்கறிகள், சிறுதானியங்கள், மூலிகை பயறுகள், மருத்துவ குணம் கொண்ட உணவு வகைகள், மஞ்சள், மிளகாய் மற்றும் கறிவேப்பிலை உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த வேளாண் விளைபொருட்கள் அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட், நெதர்லாந்து, இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர், மலேசியா, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
ஏற்றுமதி செய்வோர் வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்ய இறக்குமதி ஏற்றுமதி குறியீடு எண், மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு உரிமம், பதிவு செய்த சான்றிதழ், பதிவு மற்றும் உறுப்பினர்சான்றிதழ், ஏற்றுமதியாளர் வங்கியின் மூலம் பெற்ற ஜி.எஸ்.டி., குறியீடு, தாவர சுகாதார சான்றிதழ் போன்ற ஆவணங்கள் பெற வேண்டும்.
எனவே மா, தென்னை, சிறு தானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம், மிளகாய், வெள்ளரி போன்றவை பயிரிட்டுள்ள விவசாயிகள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் 2025 ஏப்ரலுக்கு பின்னர் ஏற்றுமதி குறித்தான சான்றிதழ்களான இறக்குமதி- ஏற்றுமதி குறியீடு, பதிவு மற்றும் உறுப்பினர் சான்றிதழ், டிஜிட்டல் கையொப்பம் FSSAI மத்திய உரிமம் போன்றவற்றுக்கான ரசீது சமர்பித்தல், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம், வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள் ஏற்றுமதி ஆணையம் போன்ற ஏற்றுமதி நிறுவனங்களின் ஆலோசனை பேரில் அதிகபட்சம் ரூ.15 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.
ஆர்வமுள்ள விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், வேளாண் வணிகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலக ஏற்றுமதி மைய ஆலோசகர்கள், வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.