/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துாண்டில் வளைவு திட்டத்தை எதிர்த்து கிராம சபை தீர்மானம்
/
துாண்டில் வளைவு திட்டத்தை எதிர்த்து கிராம சபை தீர்மானம்
துாண்டில் வளைவு திட்டத்தை எதிர்த்து கிராம சபை தீர்மானம்
துாண்டில் வளைவு திட்டத்தை எதிர்த்து கிராம சபை தீர்மானம்
ADDED : ஆக 15, 2025 11:15 PM
ராமநாதபுரம்: தங்கச்சிமடம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் வடக்கு கடற்கரை துாண்டில் வளைவு திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தங்கச்சிமடம் அப்துல்கலாம் நினைவிடம் அருகே கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. மண்டபம் யூனியன் அதிகாரி கவிதா தலைமை வகித்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தங்கச்சிமடம் அய்யன் தோப்பு பகுதியை சேர்ந்த சவரிராஜ் வைத்த கோரிக்கையில், தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை பகுதியில் சூசையப்பர்பட்டினம் முதல் அந்தோணியார்புரம் வரை உள்ள பகுதியில் உள்ள 7 மீனவர் கிராமங்களில் 5 வகையான மீன்பிடி முறையில் மீன் பிடித்து வருகிறோம்.
இந்நிலையில் மீனவர்களின் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணாமல் தற்காலிக தீர்வாக துாண்டில் வளைவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம், கடலோர ஒழுங்குமுறை அமைப்பில் உரிய அனுமதி பெறவில்லை. அங்கு வசிக்கும் மக்களிடமும் கருத்து கேட்கவில்லை. வடக்கு கடற்கரை பகுதியை வாழ்விடமாக கொண்ட கடற்பசுக்களும், மடவை மீன் உற்பத்தியும் பாதிக்கப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்க இதுபோன்ற தற்காலிக திட்டத்தை கைவிட்டு ஒருங்கிணைந்த மீன்பிடி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமின்றி துாண்டில் வளைவு திட்டம் கொண்டு வந்தால் எதிர்காலத்தில் வேறு எந்த திட்டமும் செயல்படுத்த முடியாமல் போகும் அபாயம் உள்ளது என்றார்.
பெரும்பான்மை மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

