
ராமநாதபுரம் வறண்ட மாவட்டம் என்பதால் மழைக்காலங்களில் மழை நீரை சேமிக்க நகர், புறநகர் பகுதிகளில் ஏராளமான ஊருணிகள் வெட்டப்பட்டுள்ளன. குறிப்பாக ராமநாதபுரம் நகரில் மட்டும் 20க்கும் மேற்பட்ட ஊருணிகள் உள்ளன.
இவை நிலத்தடி நீராதாரத்தை பாதுகாக்கின்றன. மாவட்டத்தை பொறுத்தமட்டில் நிலத்தடி நீர் 20 முதல் 40 அடியில் கிடைத்தாலும், அந்த நீர் உப்பு நீராகவே உள்ளது. கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் இருந்தால் மட்டுமே உவர்ப்பு குறைந்து மக்கள் அன்றாட தேவைக்கு பயன்படுத்த முடிகிறது.
இந்நிலையில் இவ்வாண்டு வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து கோடை மழையும் குறிப்பிடும் படியாக பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான ஊருணிகளில் தற்போது தண்ணீர் குறைந்து வறண்ட நிலையில் காணப்படுகின்றன. இதனால் நகர், புறநகர் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் தண்ணீரின் உவர்ப்பு தன்மை அதிகரித்துள்ளது.
எனவே வறண்ட நிலையில் உள்ள கண்மாய், ஊருணிகள் கண்டறிந்து அவற்றை பருவ மழைக்கு முன் துார்வாரி ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள், மக்கள் வலியுறுத்தினர். மேலும் ராமநாதபுரம் நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் ஊருணிகளுக்கு பெரிய கண்மாயிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.