/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
/
மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : டிச 31, 2024 04:32 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.
மார்கழி மாத அமாவாசை மற்றும் மூல நட்சத்திரம் இவை இரண்டும் இணைந்து வரும் நாளில் அனுமன் ஜெயந்தி விழா கோயில்களில் கொண்டாடப்படுகிறது. வீரம், பக்தி, ராம சேவை, பேச்சாற்றல், புத்தி கூர்மை ஆகியவற்றிற்கு உதாரணமாக விளங்குபவர் அனுமன். ராம காவியத்தில் ஆணி வேராக விளங்கக் கூடியவர். ராமாயணத்தில் அனுமனின் திறன்களை அழகாக எடுத்துக் கூறும் பகுதிக்கு சுந்தரகாண்டம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த சுந்தரகாண்டத்தை படித்தாலே எப்படிப்பட்ட துன்பங்களும் தீரும் என நம்பப்படுகிறது. அனுமன் அவதரித்த தினத்தை அனுமன் ஜெயந்தியாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ராமநாதபுரம் சமஸ்தானத்தை சேர்ந்த கோதண்ட ராமர் சுவாமி கோயிலில் அனுமன், வீரஆஞ்நேயர் சன்னதிகளில் வடைமாலை, வெற்றிலை மாலை அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது.
வெளிபட்டணம் முத்தலாம்மன் கோயிலில் ஆஞ்நேயர் சன்னதி, ராமநாதபுரம் போஸ்ட் ஆபிஸ் அருகில் உள்ள பால ஆஞ்சநேயர் கோயில், ராம சேதுக்கரை சேதுபந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
* பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவில் டிச.25ல் சகஸ்ர தீப வழிபாடு, மறுநாள் விளக்கு பூஜை நடந்தது.
டிச.27ல் மின்சார தீப கேடயத்தில் அனுமன் வீதி உலா வந்தார். நேற்று மதியம் 12:00 மணிக்கு அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி சகஸ்ரநாம அர்ச்சனை, விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் நடந்தது. மாலையில் அனுமன் சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்தார்.
பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று முன்தினம் 108 கலச ஸ்தாபன அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை முதல் மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் வால்கோட்டை அனுமன் அலங்காரத்தில் இருந்தார். மாலை ராம நாம ஜெய பாராயணம் நடந்தது. பின்னர் பக்தர்கள் வடை மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்தனர்.
பரமக்குடி எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் பெருமாள் கோயிலில் காலை 9:00 மணி முதல் மஹா யாகம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு ராஜ அலங்காரத்துடன் திருவீதி உலா வந்தார்.
பரமக்குடி வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் 1008 வடை மாலை சாற்றி மகா தீப ஆராதனைக்கு பிறகு பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இரவு 7:00 மணிக்கு பெருமாள், ராமாவதாரத்தில் அனுமந்த வாகனத்தில் வீதி உலா வந்தார்.
*திருப்புல்லாணி அருகே சேதுக்கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் அனுமன் துதி பாடினர்.
* கடலாடியில் உள்ள வரத ஆஞ்சநேயர் கோயிலில் மாவட்டத்தில் 21 அடி உயரம் கொண்ட பெரிய ஆஞ்சநேயர் சிலை வடிக்கப்பட்டது.
இங்கு நேற்று காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. பின்னர் 21 வகை அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வடை மாலை, வெற்றிலை மாலை உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின்முறை சங்கத்தினர் செய்திருந்தனர்.
கடலாடி பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண சுவாமி கோயிலில் உள்ள ராமதுாதர் அனுமானுக்கு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மூலவர் ராமதுாத அனுமானுக்கு 16 வகை அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
நேற்று மாலை 4:00 மணிக்கு சுதர்சன ஹோமம், மிருத்துஞ்ஜெய ஹோமம் உள்ளிட்டவைகளும் நடந்தது. பக்தர்கள் ராம நாம கீர்த்தனை பாடினர். வெண்ணை சாற்றப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கடலாடி கவுரவ செட்டியார் மகாஜன சங்கத்தினர் மற்றும் வாலிபர் சங்கத்தினர் செய்திருந்தனர்.
* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கிழக்கு வாசல் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடந்தது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஸ்ரீ தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு வடைமாலை, துளசி மாலையில் அலங்கரிக்கப்பட்ட மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.