/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு கவர்னர் மாளிகை முற்றுகை கே.பாலகிருஷ்ணன் பேட்டி
/
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு கவர்னர் மாளிகை முற்றுகை கே.பாலகிருஷ்ணன் பேட்டி
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு கவர்னர் மாளிகை முற்றுகை கே.பாலகிருஷ்ணன் பேட்டி
தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கேட்டு கவர்னர் மாளிகை முற்றுகை கே.பாலகிருஷ்ணன் பேட்டி
ADDED : செப் 20, 2024 11:54 PM
ராமேஸ்வரம்:தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை கடற்படை வசமுள்ள படகுகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கக் கோரியும் நேற்று ராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார். முன்னதாக அவர் கூறியதாவது :
7 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து விலை உயர்ந்த படகுகளை பறிமுதல் செய்கிறது. மீனவர்களை சிறையில் மொட்டையடித்து சித்திரவதை செய்துகிறது. ஒருவருக்கு தலா ரூ.1 கோடி முதல் 1.5 கோடி வரை அபராதம் விதிக்கின்றனர். இதனால் தமிழக மீனவர்கள் அச்சத்தில் மீன்பிடிக்க செல்லாமல் முடங்கி உள்ளனர்.
ரஷ்யா, உக்ரைன் இடையே சமரசம் செய்வதாக கூறும் மோடி இலங்கை அரசை கட்டுப்படுத்தி மீனவர்களை பாதுகாக்க முடியாதா.
இலங்கை வசமுள்ள படகிற்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குகிறது. மத்திய அரசு ஒரு சல்லி காசு கூட வழங்குவதில்லை. தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசு எதற்காக வெளியுறவுத்துறையை வைத்துள்ளது.
இரு நாட்டு மீனவர்களும் சுமூகமாக மீன்பிடிக்க உடன்பாடு ஏற்படுத்த வேண்டும். ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் துாரத்தில் இந்திய எல்லை முடிந்து விடும். இதில் 7 கடல் மைலில் மீன்களே இல்லை. மீதமுள்ள 5 கடல் மைலில் 6 மாவட்ட மீனவர்கள் எப்படி மீன்பிடிக்க முடியும்.
இப்பிரச்னைக்கு தீர்வு காண தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும் மத்திய அரசு செவி கொடுப்பதில்லை. சுமூக தீர்வு காண வலியுறுத்தி 40 எம்.பி.,க்களும் பார்லமென்டில் குரல் எழுப்புவோம். மேலும் கடலோர மாவட்ட மீனவர்களை திரட்டி கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ராமேஸ்வரம் தாலுகா மார்க்சிஸ்ட் செயலாளர் சிவா, ம.தி.மு.க., பழனிச்சாமி, காங்., ராஜிவ் காந்தி, இந்திய கம்யூ., செந்தில்வேல், மீனவர் சங்கத் தலைவர்கள் சேசு, சகாயம், எமரிட் உட்பட பலர் பங்கேற்றனர்.