/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி துவக்கம்
/
முருகன் கோயில்களில் கந்த சஷ்டி துவக்கம்
ADDED : அக் 23, 2025 04:23 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா நேற்று (அக்.,22ல்) காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று காலையில் மூலவருக்கு அபிேஷகம் செய்து அலங்கார்தில் தீபாராதனை நடந்தது. காப்பு கட்டுதல் நடந்தது. பக்தர்கள் கையில் காப்பு கட்டி சஷ்டி விரதத்தை துவங்கினர். இதே போன்று ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. பக்தர்கள் காப்புக்கட்டிக் கொண்டனர்.
பெருவயல் கிராமத்தில் சிவசுப்பிரமணிய சுவாமி என்ற ரெணபலி முருகன் கோயிலில் விநாயகர் பூஜையுடன் அபிஷேக ஆராதனையுடன் காப்புக்கட்டுதல் நடந்தது. விழா நாட்களில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, உள்பிரகாரம் உலா நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக அக்.,27 ல் சூரசம்ஹாரம், அக்., 28ல் திருக்கல்யாணம் நடக்கிறது, கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
* பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி கோயில் சஷ்டி விழா நேற்று இரவு 8:00 மணிக்கு துவங்கியது. சுவாமிக்கு காப்பு கட்டப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தினமும் சுவாமி இரவு 8:00 மணிக்கு பல்வேறு அலங்காரங்களில் அருள் பாலித்து தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்படும். அக்., 27 மாலை 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி மயில்வாகனத்தில் திருவீதி உலா வருவார்.
பின்னர் வைகை ஆற்றின் கரையில் இரவு சூரசம்ஹாரம் நடக்க உள்ளது. மறுநாள் காலை தெய்வானை, சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படும். இரவு பட்டண பிரவேசம் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் செய்துள்ளனர். பரமக்குடி பாரதி நகர் முருகன் கோயில், பால்பண்ணை முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா துவங்கி நடக்கிறது.