UPDATED : நவ 17, 2026 06:39 PM
ADDED : நவ 17, 2026 06:36 PM

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில் இயந்திரத்தில் துணிகளை சலவை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாலுகா அலுவலகத்தை சலவை தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் முற்றுகையிட்டனர்.
ராமேஸ்வரத்தில் பாரம்பரியமாக உள்ள சலவை தொழிலாளர்கள், தங்கும் விடுதிகள், வீடுகளில் துணிகளை சேகரித்து சலவை செய்கின்றனர். இவர்கள் இறுதி சடங்கிலும் பணி செய்கின்றனர். இந்நிலையில் சலவை தொழிலாளர்கள் அல்லாத சிலர் தங்கும் விடுதிகளில் துணிகளை சேகரித்து இயந்திரத்தில் சலவை செய்து கொடுக்கின்றனர்.
இதற்கு சலவை தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தை குடும்பத்தினருடன் முற்றுகையிட்டனர். பின் தாசில்தார் இந்திரஜித், தனியார் சலவை தொழில் செய்வது தடுக்கப்படும் என உறுதி அளித்தார்.இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி, அ.தி.மு.க., நகர் தலைவர் அர்ச்சுனன், பா.ஜ., நகர் தலைவர் மாரி, இந்திய கம்யூ., நகர் செயலாளர் செந்தில்வேல், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மீனவர் சங்கத் தலைவர் போஸ், வீ த லீடர்ஸ் நிர்வாகி ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.
