UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:04 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முன்னாள் விமானப்படை அதிகாரியை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் பரோலில் வந்த நிலையில் மாயமானார். கேணிக்கரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மகாசக்தி நகரை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரி சந்திரசேகர் 60, வங்கியில் காசாளராக பணிபுரிந்தார். 2017ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபயிற்சி மேற்கொண்ட போது காரில் வந்த கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில் வாலாந்தரவையை சேர்ந்த அருண்குமார் 25, சடையன் வலசையைச் சேர்ந்த அருண்பாண்டி 24, ஆகியோர் போலீசில் சரணடைந்தனர்.
இவ்வழக்கில் அருண் பாண்டிக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், நீதிமன்றத்தில் 21 நாட்கள் பரோல் பெற்று வெளிவந்தார்.
பரோல் தேதி முடிந்து அக்.2 ல் மதுரை மத்திய சிறையில் அவர் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை ஆஜராகவில்லை. இதனால் மதுரை மத்திய சிறை அதிகாரி சிவராஜன் புகாரில் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து அருண்பாண்டியை தேடுகின்றனர்.
