/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாலிபரை வெட்டிக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
/
வாலிபரை வெட்டிக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஏப் 22, 2025 05:38 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே வாலிபரை வெட்டிக்கொலை செய்தவருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
வாலாந்தரவை தெற்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுக்கிளி. இவரது குடும்பத்திற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பொன்னுக்கிளி மகன் சிவக்குமார் 22, சென்னையில் டீக்கடையில் பணிபுரிந்தவர் சொந்த ஊருக்கு வந்திருந்தார். 2018 ஜூன் 13ல் வாலாந்தரவையில் உள்ள கடைக்கு சிவக்குமார் சென்றிருந்தார். அப்போது அங்கு சென்ற முனியாண்டி மகன் வைத்தீஸ்வரன் 30, அரிவாளால் சிவக்குமாரை வெட்டியதில் சம்பவ இடத்தில் பலியானார். சிவக்குமாரின் தாயார் முத்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார்.
வைத்தீஸ்வரனை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. ஜாமினில் இருந்த வைத்தீஸ்வரன் நேற்று இவ்வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். வைத்தீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து முதன்மை அமர்வு நீதிபதி மெகபூப் அலிகான் தீர்ப்பளித்தார்.