/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இன்டர்ன்ஷிப் செய்ய முடியாமல் தவிப்பு
/
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இன்டர்ன்ஷிப் செய்ய முடியாமல் தவிப்பு
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இன்டர்ன்ஷிப் செய்ய முடியாமல் தவிப்பு
வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் இன்டர்ன்ஷிப் செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : நவ 07, 2025 01:54 AM
ராமநாதபுரம்: வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., படித்துமுடித்து எப்.எம்.ஜி.இ., என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த 500க்கு மேற்பட்டவர்கள் அரசு மருத்துவக்கல்லுாரிகளில் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் மருத்துவம் படிக்க கல்லுாரிகளில் இடம் கிடைக்காதவர்கள் பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று மருத்துவம் படித்து வருகின்றனர். பின்னர் இந்தியா வருபவர்கள் எப்.எம்.ஜி.இ., என்ற தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.
அதன் பின் அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக (உள்ளுறை மருத்துவர் பயிற்சி) ஓராண்டு பணியாற்றிவிட்டு, மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து உரிமம் பெற்றுதான் டாக்டராக பணிபுரிய முடியும். அதன்படி, வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை நிறைவு செய்து நடப்பாண்டில் (2025) தேசிய மருத்துவ ஆணையம் மூலம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 500க்கும் மேற்பட்டோர் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்து இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற முடியாமல் தவிக்கின்றனர்.
இதுகுறித்து எப்.எம்.ஜி.இ., தேர்வில் வெற்றி பெற்றுள்ள மாணவர்கள் கூறியதாவது: வெளிநாட்டில் எம்.பி.பி.எஸ்., படித்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 10 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டு விட்டதால் பயிற்சி இடங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்று 10 மாதங்களாகியும் பயிற்சி பெற முடியவில்லை. எனவே தமிழகத்தில் புதிதாக துவக்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும் எங்களைப்போன்றோரை பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும். பிற மாநிலங்களில் எப்.எம்.ஜி.இ., தேர்வில் வெற்றி பெற்று ஓரிரு மாதங்களில் பயிற்சி பெறுகின்றனர். அது போன்று தமிழகத்திலும் 20 சதவீதம் இடங்களை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து அரசு மருத்துவக்கல்லுாரிகள் மட்டுமின்றி தாலுகா அரசு மருத்துவமனைகளிலும் பயிற்சி பெற வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.

