/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழக மீனவர் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு
/
தமிழக மீனவர் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு
தமிழக மீனவர் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு
தமிழக மீனவர் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை: முத்தரசன் குற்றச்சாட்டு
ADDED : மார் 08, 2024 02:08 AM

ராமேஸ்வரம்:-'' இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்களை மீட்கவும், பிரச்னைக்கு தீர்வு காணவும் மோடி அரசுக்கு அக்கறை இல்லை ''என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் குற்றம் சாட்டினார்.
இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்கக் கோரியும், தமிழக மீனவர்களை பாதுகாக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் நேற்று ராமேஸ்வரத்தில் ஏ.ஐ.டி.யு.சி., மீனவ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முத்தரசன் பங்கேற்றார்.
முன்னதாக அவர் கூறியதாவது: 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என பொய் வாக்குறுதி அளித்தார். ஆனால் இன்று இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், படகுகளை மூழ்கடிப்பதும் அதிகரித்துள்ளது.
மேலும் இலங்கை சிறையில் தண்டனை பெற்ற 5 மீனவர்கள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 143 படகுகளை மீட்கவோ மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு துளியும் அக்கறை காட்டவில்லை. தமிழக மீனவர்களை மாற்றாந் தாய் பிள்ளையாக மோடி அரசு பார்க்கிறது.
எதிரி நாடான பாகிஸ்தான் கடலில் கூட மீனவர்கள் மீன்பிடித்து திரும்புகின்றனர். நட்பு நாடான அதுவும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு மத்திய அரசு, தமிழக அரசு பல உதவிகளை செய்தும் நம் மீனவர்களை தொடர்ந்து நசுக்குவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது.
கடந்த நவம்பரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலைபேசியில் பேசி ராமேஸ்வரம் மீனவர்களை மீட்டார். அப்படியெனில் தற்போதும் மீனவர்களை மீட்பதில் என்ன சிக்கல் உள்ளது. கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தும்.
மேலும் பாரம்பரியமான கச்சத்தீவு திருவிழாவில் மீனவர்கள் பங்கேற்கவும் முடியும். தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிவாரணம் கொடுக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கிறது.
போதை பொருள் வந்திறங்கும் புகலிடமாக குஜராத் உள்ளது. அங்கிருந்து தான் தமிழகத்திற்கு கடத்தி வரப்படுகிறது. இந்தியா முழுவதும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழகத்தை மட்டும் குறை சொல்ல முடியாது என்றார்.
ஏ.ஐ.டி.யு.சி., மீனவ தொழிலாளர் மாநில செயலாளர் செந்தில்வேல், மாநில பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

