முள்ளிமுனை அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை: மாணவர்கள் தவிப்பு
முள்ளிமுனை அரசு பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை: மாணவர்கள் தவிப்பு
UPDATED : நவ 17, 2026 06:56 PM
ADDED : நவ 17, 2026 06:56 PM

தொண்டி: முள்ளிமுனை அரசு நடுநிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.தொண்டி அருகே முள்ளிமுனை அரசு நடுநிலைப்பள்ளியில் 265 மாணவர்கள் படிக்கின்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்களின் கல்வி நலன் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
இப்பள்ளி நடுநிலைப்பள்ளியாக மட்டுமே செயல்படுவதால் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து கல்வி கற்க தொண்டி போன்ற நீண்ட துார பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏழை மாணவர்கள் உயர் கல்விக்காக நீண்ட துாரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதால் பாதியிலேயே படிப்பபை நிறுத்தும் அவலம் நிலவுகிறது.
பள்ளியின் தற்போதைய உட்கட்டமைப்பு நிலை கவலை அளிக்கும் வகையில் உள்ளது. பள்ளியில் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ள கட்டடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனை இடித்து உடனடியாக அப்புறபடுத்த வேண்டும். கழிப்பறை கதவுகள் சேதமடைந்துள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
பள்ளி வளாகத்தை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் தொல்லைகளும், பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பள்ளியில் நிலவும் இந்த அடிப்படை வசதி குறைகளை பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
