/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உழைப்பை சுரண்டுவதாக செவிலியர்கள் வேதனை
/
உழைப்பை சுரண்டுவதாக செவிலியர்கள் வேதனை
ADDED : டிச 24, 2025 05:25 AM

ராமநாதபுரம்: சம வேலைக்கு சம ஊதியம் எனத் தெரிவித்து விட்டு தற்போது செவிலியர்களின் உழைப்பை சுரண்டுவதை ஏற்க முடியாது என தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் டிச.,18 ல் சென்னையில் போராட்டம் நடத்தினர். மாவட்ட அளவில் டிச.,19 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் அரசு மருத்தவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தனலெட்சுமி தலைமையில் 150 பேர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினர். செவிலியர்கள் கூறியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் ஒப்பந்த முறையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களை நிரந்தரமாக்குவோம் என்று தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதனை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தினால் ஒப்பந்த முறையை கொண்டு வந்தவர்களிடம் சென்று கேட்குமாறு அலட்சியமாக தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் காலிப்பணியிடம் இல்லை என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம வேலைக்கு சம ஊதியம் எனத் தெரிவித்து விட்டு தற்போது செவிலியர்களின் உழைப்பை சுரண்டுகின்றனர். அகிம்சை முறையில் போராடும் செவிலியர்களை கைது செய்தது கண்டனத்திற் குரியது என்றனர்.

