நிரந்தர பணி வழங்கக் கோரிசெவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
நிரந்தர பணி வழங்கக் கோரிசெவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 18, 2026 06:31 PM
ராமநாதபுரம்: தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
செவிலியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தீபலெட்சுமி தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சிவாஜி, ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் நிர்மலா முன்னிலை வகித்தனர். செவிலியர் சங்க மாநில இணைச் செயலாளர் வினோதினி கூறியதாவது:
தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகம் மூலம் 11 மாதம் ஒப்பந்த முறையில் ரூ.21 ஆயிரம் சம்பளத்தி பணி வழங்குகின்றனர். கொரோனா காலத்தில் பணி புரிந்த செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லை.
இந்நிலையில் தற்காலிக பணி குறித்த நீதிமன்ற தடை விலகிய மறுநாளே 4727 செவிலியர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரசு மருத்துவனைகளில் 4 செவிலியர்கள் தேவைப்படும் இடத்தில் ஒருவர் மட்டும் பணிபுரிகிறார். மருத்துவத் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் நிரந்தர தன்மையுடன் பணியமர்த்த வேண்டும் என்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட இணைச் செயலாளர் முத்துச்சாமி, வேலைவாய்ப்புத் துறை அலுவலர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
––
