/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
/
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு
ADDED : ஜன 11, 2025 06:44 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் உட்பட மாவட்டம் முழுவதும் பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறப்புடன் கோலாகலமாக நடந்தது.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44 வதாக திகழ்கிறது. டிச.31ல் பகல் பத்து உற்ஸவத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்ஸவருக்கு விசேஷத் திருமஞ்சனம், சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது.கல்யாண ஜெகநாத பெருமாள் சயன திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதனை தொடர்ந்து கண்ணாடி சேவை, கன்னிகா பூஜை, கோ பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று மாலை 6:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண ஜெக நாத பெருமாள் எழுந்தருளினார். கோயில் பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது.
தெர்ப்பசயன ராமர் மண்டபம் அருகே உள்ள பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று இரவு 7:15 மணிக்கு நடந்தது. அப்போது மேளதாளங்கள் இசைக்கப்பட்டு கோவிந்தா, நாராயணா கோஷம் முழங்கினர். உற்ஸவ மூர்த்திகள் முன்பாக எதிர் சேவையாக ராமானுஜர், திருமங்கை ஆழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்கள் புறப்பாடு நடந்தது.
பருத்தி உலா எனப்படும் உற்ஸவமூர்த்தி புறப்பாடு மூன்று முறை வலம் வந்தது. நேற்று மாலையில் இருந்து இரவு வரை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்செய்தனர்.
ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன், சரகப் பொறுப்பாளர் கிரிதரன் மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்துஇருந்தனர்.
இன்று ஜன.11 முதல் 19 வரை ராப்பத்து உற்ஸவம்துவங்க உள்ளது. திருவாய்மொழி சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் தொடர்ந்து நடக்கிறது.
*திருவாடானை அருகே பாண்டுகுடி லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயில்களில் நேற்று காலை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், சந்தனம் போன்ற பல்வேறு வகை அபிேஷகங்கள் நடந்தது.
மலர்களால் அலங்கரிக்கபட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை சுப்ரபாதம், 5:00 மணிக்கு சொர்க்கவாசல் நடை திறப்பு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த கோதண்டராமர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மூலவர் ராமர், சீதா, லெட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு அபிேஷகம், அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது. அதன் பிறகு மாலை 6:45மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டு ராமர் அருள்பாலித்தார்.
சொர்க்கவாசல் வழியாக சென்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுபோல வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அழகன்குளம் ஆண்டாள் சமேத சந்தான கோபாலா கிருஷ்ணன் கோயிலில் காலையில் பரமபதவாசல் திறக்கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார். சொர்க்கவாசல் வழியாக சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
* பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. காலை 5:10 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் வஜ்ர கவசம், பாண்டியன் கொண்டை சூடி சர்வ அலங்காரத்துடன்பரமபத வாசல் வழியாக வந்தார். கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க தரிசித்தனர்.
ஆடி வீதியில் வலம் வந்த பெருமாள் ஏகாதசி மண்டபத்தில் அமர்ந்தார். பின்னர் ஹோமங்கள்நடந்து அபிஷேகம், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இரவு 8:00 மணிக்கு ராப்பத்து உற்சவம் துவங்கிய நிலையில், ஜன.19 வரை நடக்கிறது.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்தார். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், மாலை சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
*பரமக்குடி அனுமார்கோதண்ட ராமசாமி கோயிலில் பெருமாள் கருட வாகனத்தில் பரமபத வாசல் வழியாக அருளினார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர்.
* கமுதியில் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தது.பெருமாளுக்கு பால், சந்தனம்,மஞ்சள், திரவிய பொடி உட்பட 21 வகை அபிஷேகம் அலங்காரம் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
ராமேஸ்வரம்: வைகுண்ட ஏகாதசியில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஏராளமான பக்தர்கள்சுவாமி தரிசனம்செய்தனர்.
நேற்று ராமேஸ்வரம் கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமான், சுக்ரீவன் எழுந்தருளிவீதி உலா சென்றனர். பின்னர் ராமர் தீர்த்தகுளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரிக் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அங்கிருந்து புறப்பாடாகி கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்து சேதுமாதவர் சுவாமி சன்னதி முன் எழுந்தருளினர். சேது மாதவர் சன்னதி சொர்க்கவாசல் கதவு திறந்ததும் கோயில் குருக்கள் மகா தீபாராதனை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்செய்தனர்.