/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பன் புதிய துாக்கு பாலம் பழுது; 6 மணி நேரம் காத்திருந்த ரயில்கள்
/
பாம்பன் புதிய துாக்கு பாலம் பழுது; 6 மணி நேரம் காத்திருந்த ரயில்கள்
பாம்பன் புதிய துாக்கு பாலம் பழுது; 6 மணி நேரம் காத்திருந்த ரயில்கள்
பாம்பன் புதிய துாக்கு பாலம் பழுது; 6 மணி நேரம் காத்திருந்த ரயில்கள்
ADDED : ஆக 13, 2025 01:35 AM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே நேற்று பாம்பன் புதிய ரயில் துாக்கு பாலத்தில் பழுது ஏற்பட்ட நிலையில் 6 மணி நேரம் ரயில்கள் காத்திருந்ததால் பயணிகள் அவதிப்பட்டனர்.
பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலத்தை ஏப்.,6ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இப்பாலம் நடுவில் உள்ள துாக்கு பாலம் திறந்து மூடுவதில் அடிக்கடி சிக்கல் ஏற்பட்டது. கடைசியாக ஜூலை 12ல் திறந்து மூடிய போது சிக்கல் ஏற்பட்டு ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக சென்றன. இதனால் கடந்த சில நாட்களாக அப்பாலத்தில் உள்ள இரும்பு கம்பி வடத்தை ரயில்வே ஊழியர்கள் சீரமைத்தனர்.
இதையடுத்து நேற்று மதியம் 2:00 மணிக்கு ரயில்வே பொறியாளர்கள் புதிய துாக்கு பாலத்தை திறந்து மூடி சோதனை செய்தனர். ஆனால் மூடிய போது தண்டவாளத்தில் துல்லியமாக பொருந்தாததால் அதிர்ச்சி அடைந்தனர்.
பயணிகள் அவதி இதனால் நேற்று மதியம் 2:40 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை புறப்பட்ட பயணிகள் ரயில், மதியம் 4:00 மணிக்கு தாம்பரம் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பன் அருகே அக்காள்மடத்தில் நிறுத்தப்பட்டன. மேலும் மதுரையில் மதியம் 1:50 மணிக்கு ராமேஸ்வரம் புறப்பட்ட பயணிகள் ரயில் மாலை 4:00 மணிக்கு மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது. மாலை 5:50க்கு புறப்பட வேண்டிய சென்னை போர்ட் மெயில் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
பின் மாலை 6:30 மணிக்கு அக்காள்மடத்தில் நிறுத்திய பயணிகள் ரயிலின் இன்ஜினை மட்டும் பாம்பன் பாலத்தில் இயக்கி சோதனை ஓட்டம் செய்தனர். இரவு 8:00 மணி வரை துாக்கு பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடத்தியதால் 2 மணி நேரம் 40 நிமிடம் முதல் 6 மணி நேரம் வரை ரயில்கள் காத்திருந்தன. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். பழுது சரிசெய்யப்பட்ட நிலையில் இரவு 8:15 மணி முதல் ரயில்கள் அடுத்தடுத்து இப்பாலத்தை கடந்து சென்றன.