/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் வரும் ஆனால் நிற்காது; நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
/
பரமக்குடி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் வரும் ஆனால் நிற்காது; நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
பரமக்குடி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் வரும் ஆனால் நிற்காது; நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
பரமக்குடி ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் வரும் ஆனால் நிற்காது; நின்று செல்ல பயணிகள் கோரிக்கை
UPDATED : ஆக 19, 2025 08:29 AM
ADDED : ஆக 18, 2025 11:21 PM

ராமநாதபுரம்: பரமக்குடி ரயில் நிலையம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வருவாய் ஈட்டியும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் நிற்காமல் செல்வதால், வியாபாரிகள் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே அனைத்து விரைவு ரயில்களும் பரமக்குடியில் நின்று செல்ல தெற்குரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விரைவு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் மட்டும் நிறுத்தப்படுகின்றன. இந்நிலையில் பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு 59 சிறிய ரயில் நிலையங்களில் வெளிமாநில ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே சமீபத்தில் அறிவித்தது.
வெளி மாநிலத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் பரமக்குடி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் பரமக்குடி ரயில் நிலையம் இடம்பெறாதது அப்பகுதி மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023--24 நிதியாண்டில் பரமக்குடி ரயில் நிலையத்தில் இருந்து 1 லட்சத்து 16 ஆயிரத்து 762 பேர் முன்பதிவு செய்து பயணித்ததில் ரூ.7 கோடியே 97 லட்சத்து 81 ஆயிரத்து 770 வருவாய் கிடைத்துள்ளது.
அதுபோல் 4 லட்சத்து 28 ஆயிரத்து 158 பேர் முன்பதிவு செய்யாத டிக்கெட்டில் பயணித்ததில் ரூ.2 கோடியே 17 லட்சத்து 73 ஆயிரத்து 060 வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி 5 லட்சத்து 83 ஆயிரத்து 334 பேர் பரமக்குடி ரயில் நிலையம் மூலம் பயணித்ததில் ரூ.10 கோடியே 15 லட்சத்து 54 ஆயிரத்து 830 வருவாய் கிடைத்துள்ளது.
ரயில் நிலையத்தின் ஆண்டு வருவாய் ரூ.10 கோடியை தாண்டிய நிலையில் என்.எஸ்.ஜி., 5 தரத்தில் இருந்து என்.எஸ்.ஜி., 4 என தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விரைவு ரயில்களும் நின்று சென்றால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என ரயில் பயணிகள் வலியுறுத்தினர்.
பயணிகள் ஏமாற்றம் இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகி சகாயவினோத் கூறியதாவது: பரமக்குடி ரயில் நிலையத்தை சார்ந்து முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி, இளையான்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்ளன. தற்போது ரயில் நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
ராமேஸ்வரத்தில் இருந்து ஹூப்ளி, செகந்திராபாத், பெரோஸ்பூர், அயோத்தி ஆகிய வெளிமாநிலங்களுக்கு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் ராமநாதபுரத்திற்கு பின் மானாமதுரையில் நின்று செல்வதால், இடையில் உள்ள 3 தாலுகா மக்கள் 60 கி.மீ., பயணிக்க வேண்டியுள்ளது. அதனால் அனைத்து விரைவு ரயில்களும் பரமக்குடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி-ராமேஸ்வரம் விரைவு ரயில் கொரோனா காலத்தில் ஒரு மார்க்கமாக மட்டும் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது.
இருமார்க்கமாக நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும். அதுபோல் வரும் காலத்தில் புதிய ரயில்கள் அறிவிக்கும் போது பரமக்குடியில் நின்று செல்ல வேண்டும் என்றார்.