ADDED : மே 26, 2025 02:12 AM
ராமநாதபுரம்,: ராமநாதபுரம் பா.ஜ., கட்சியைச் சேர்த்த தேவேந்திர குல வேளாளர்கள் தங்கள் இனத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என மாவட்ட தலைமைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் மாநில நிர்வாகம் தான் நிர்வாகிகளை நியமிக்கின்றனர். மாவட்ட நிர்வாகிகளுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைக்கு தீர்வு கிடைக்காததால் பா.ஜ., வின் முன்னாள் பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் அச்சுந்தன்வயலில் உள்ள கட்சி அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பிரபு தெரிவித்ததாவது: தேசிய தலைமை தேவேந்திர குல வேளாளர்களுக்கு மதிப்பு தருகிறது. மாநில, மாவட்ட நிர்வாகம் புறக்கணிக்கிறது. மையக்குழுவில் பிரதிநிதித்துவம் வழங்க கோரிக்கை வைத்தோம். உங்களில் ஒருவரை தேர்வு செய்து கொடுங்கள் நியமிக்கிறோம், என்கிறது மாவட்ட நிர்வாகம். எந்த சமுதாயத்தில் இதுபோன்று தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் போராட்டம் நடத்துவோம், என்றார்.