/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி தெருக்களில் வெறி நாய்களால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
/
பரமக்குடி தெருக்களில் வெறி நாய்களால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
பரமக்குடி தெருக்களில் வெறி நாய்களால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
பரமக்குடி தெருக்களில் வெறி நாய்களால் மக்கள் அச்சம்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா
ADDED : ஆக 12, 2025 05:58 AM

பரமக்குடி: பரமக்குடி தெருக்களில் வெறி நாய்கள் சண்டையிட்டு சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரமக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சியான இங்கு ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் சுற்றுவட்ட கிராம மக்களுக்கு பிரதான வணிக மற்றும் கல்வி நிலையங்களை உள்ளடக்கிய இடமாக உள்ளது. இதனால் தினந்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நகராட்சி சார்பில் சில ஆண்டுகளாக நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் உள்ளதால் ஒவ்வொரு தெருவிலும் 20க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவற்றில் பல உணவு கிடைக்காமல் வெறி பிடித்து அலைவதுடன், உடலில் புண்கள் ஏற்பட்டு சொறி சிரங்குடன் திரிகிறது. இத்துடன் ஒவ்வொரு தெருவில் இருந்தும் மற்ற நாய்கள் வரும் போது ஒன்றை ஒன்று அதிரடியாக குரைத்து கடித்துக் கொள்கின்றன. இந்நிலையில் நேற்று எமனேஸ்வரம் பகுதியில் நாய் கடிக்கு ஆளான ஆடு ஒன்று இறந்துள்ளது.
இதேபோல் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாய்கள் கடித்து தடுப்பூசி செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் நேற்று தெருக்களில் சுற்றும் நாய்களை பிடித்து காப்பகத்தில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.
இதில் எந்த சமரசமும் இன்றி நாய்களை பிடிப்பதுடன் அவற்றிற்கு கருத்தடை செய்து தடுப்பூசி செலுத்த வேண்டும். மேலும் காப்பகத்தில் முறையாக பராமரிக்க வேண்டுமென கூறி உள்ளது. ஆகவே மக்களின் உயிருக்கு அச்சமூட்டும் நாய்களை அப்புறப்படுத்த நகராட்சிக்கு, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.