/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் வைப்பதில்லை முன்னுதாரண கிராமம்: வளர்ச்சி திட்டங்களில் தன்னிறைவு பெற்றுள்ளது
/
அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் வைப்பதில்லை முன்னுதாரண கிராமம்: வளர்ச்சி திட்டங்களில் தன்னிறைவு பெற்றுள்ளது
அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் வைப்பதில்லை முன்னுதாரண கிராமம்: வளர்ச்சி திட்டங்களில் தன்னிறைவு பெற்றுள்ளது
அரசியல் கட்சிகள் கொடிக்கம்பம் வைப்பதில்லை முன்னுதாரண கிராமம்: வளர்ச்சி திட்டங்களில் தன்னிறைவு பெற்றுள்ளது
ADDED : மே 09, 2024 05:09 AM
உத்தரகோசமங்கை: அரசியல் கட்சியின் கொடிக்கம்பங்கள் ஏதுமின்றி இயற்கையான சூழலில் சத்தம் இல்லாமல் வளர்ச்சி திடடங்களில் தன்னிறைவு பெற்று மற்ற கிராமங்களுக்கு முன்னுதாரணமாக பல சாதனைகளை செய்து வருகிறது கொம்பூதி ஊராட்சி.
உத்தரகோசமங்கை அருகே கொம்பூதி ஊராட்சியில் 2500க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். கிராமத்தின் சிறப்பம்சமாக எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் நிறுவப்படுவதில்லை. ஊராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெற்றிருப்பது குறித்து பட்டியலிட்டு காட்டப்பட்டுள்ளது.
நுாலகம், போஸ்ட் ஆபீஸ், இ-சேவை மையம், குடிநீர் கிணறுகள் மேம்பாடு உள்ளிட்ட அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுள்ளது. கொம்பூதி ஊராட்சியில் உள்ள முக்கிய வீதிகளின் சாலைகளில் மும்முனை சந்திப்புகளில் 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உள்ளூர் இளைஞர்களின் முயற்சியால் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
ஊராட்சி துணைத் தலைவர் சண்முகவேலு கூறியதாவது: கொம்பூதி கிராமத்தில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் கொடிக்கம்பம் அமைக்கப்படுவதில்லை. எந்த கட்சியில் வேண்டுமானாலும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உறுப்பினராக இருந்து கொள்ளலாம். 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு முறையும் ஊராட்சித் தலைவராக வருபவர் போட்டியின்றி கிராம மக்களின் ஒத்துழைப்போடு ஏக மனதாக தேர்வு செய்யப்படுகின்றனர்.
கிராமத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை அரசின் மூலம் பெறுவதற்கான முயற்சிகள் திட்டமிடப்படுகின்றன. நெல் மற்றும் மிளகாய் சாகுபடிக்காக இங்குள்ள கொம்பூதி கண்மாயில் அனைவருக்கும் சீராக தண்ணீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இரண்டு விவசாயக் கூலி ஆட்கள் மூலமாக தண்ணீர் பாய்ச்சி பராமரிப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் தண்ணீர் தேவைக்கேற்ப பயன்படுத்தப்படுவதால் தண்ணீரை வீணடிப்பதில்லை.
இதற்கு கிராமத்தின் மூலமாக உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் தண்ணீர் பாய்ச்சுவது குறித்த எந்த ஒரு பிரச்னையும் ஏற்படுவதற்கு வழி இருக்காது. சீமை கருவேல மரங்கள் வளர்ப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளதால் முழு சுகாதார கிராமமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் நிர்மல் புரஸ்கார் விருது பெற்றுள்ளது. கொம்பூதி ஊராட்சியின் சிறப்பம்சங்கள் குறித்து திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் வரும் உயர் அலுவலர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து செல்கின்றனர் என்றார்.