ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் மல்லிகைப்பூ விலை உயர்வு
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியில் மல்லிகைப்பூ விலை உயர்வு
UPDATED : ஜூலை 17, 2026 12:24 AM
ADDED : ஜூலை 17, 2026 12:21 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சி மடம் பகுதிகளிலிருந்து மல்லிகை வரத்து குறைவு மற்றும் ஆடி விழா தேவை அதிகரிப்பால் கடந்த வாரம் கிலோ ரூ.400க்கு விற்றது. தற்போது விலை அதிகரித்து கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை தரத்திற்கு ஏற்ப விற்கபடுகிறது. எதிர்பார்த்த விற்பனையின்றி முதலீட்டை எடுக்க வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
மண்டபம் மற்றும் சுற்றியுள்ள அக்காள்மடம், தங்கச்சிமடம் உள்ளிட்ட கிராமங்களில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். பிற பகுதி நாற்றுகளை விட மண்டபம் பகுதி மல்லிகை நாற்றுகள் நன்றாக வளர்ந்து வாசம் மிகுதியாக உள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு மல்லிகை நாற்றுகள் விற்பனைக்கு செல்கிறது.
மல்லிகை பூ மாசி, பங்குனி, சித்திரை சீசன் காலத்தில் கிலோ ரூ.300 முதல் ரூ.500க்கு விற்கப்படுகிறது. அதுவே சீசன் இல்லாத நேரத்தில் முகூர்த்த நாட்களில் கிலோ ரூ. 1000 முதல் ரூ.3000க்கு வரை விற்கிறது. இவ்வாண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை மழை குறைவால் மண்டபம், தங்கச்சி மடம் உள்ளிட்ட இடங்களில் மல்லிகை பூக்கள் போதிய தண்ணீரின்றி பூக்கள் செடியில் உதிர்ந்து கருகி விடுகின்றன.
இதனால் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. அதே சமயம் வெளியூர்களில் இருந்து மல்லிகை பூக்கள் அதிகளவில் வந்ததால் கடந்த வாரம் உதிரி மல்லிகை பூ கிலோ ரூ.400 முதல் ரூ.450க்கு விற்றது. இன்று (ஜூலை 17) ஆடி மாத பிறப்பு, முதல் வெள்ளி கிழமை என்பதால் மல்லிகை பூக்கள் தேவை அதிகரித்து ஒரே நாளில் விலை உயர்ந்து கிலோ ரூ.600 வரை விற்கப்படுகிறது.
அதே சமயம் எதிர்பார்த்த விற்பனையின்றி முதலீட்டை எடுக்க வியாபாரிகள் சிரமப்படுகின்றனர். கோயில்களில் ஆடி விழா காரணமாக இனிவரும் நாட்களில் மல்லிகை கிலோ ரூ.1000 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
