/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உப்பு உற்பத்தி பாதிப்பால் விலை உயர்ந்தும் பயனில்லை
/
உப்பு உற்பத்தி பாதிப்பால் விலை உயர்ந்தும் பயனில்லை
உப்பு உற்பத்தி பாதிப்பால் விலை உயர்ந்தும் பயனில்லை
உப்பு உற்பத்தி பாதிப்பால் விலை உயர்ந்தும் பயனில்லை
ADDED : ஜன 05, 2024 12:56 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்திய மழையால் டிசம்பரில் துவங்க வேண்டிய உப்பளப்பணிகள் ஜனவரியில் துவங்கிய பிறகும் முடங்கியதால் உப்பு உற்பத்தி இன்றி விலை உயர்ந்து பயனில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளையொட்டிய தேவிப்பட்டினம், திருப்புல்லாணி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான உப்பளங்கள் செயல்படுகின்றன. வாலிநோக்கத்தில் அரசு உப்பு நிறுவனம் செயல்படுகிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவ மழை முடிந்த பிறகு டிசம்பரில் உப்பள பாத்திகளை தயார் செய்து ஜூன் வரை உப்பு உற்பத்தி நடக்கும். இவற்றை தமிழ்நாடு உப்பு நிறுவனத்திற்கும் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்புகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் பெய்த மழை, பனியின் தாக்கம், வெயில் குறைவு, மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு என்ற வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பால் பெரும்பாலான உப்பளங்களில் இதுவரை உற்பத்தியை துவக்கவில்லை. உப்பள பணிகள் முடங்கியுள்ளன. மேலும் மழை, குளிர்ந்த காற்றால் ஏற்கனவே இருப்பில் உள்ள உப்பின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது. துாத்துக்குடியில் வெள்ளத்தால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் டன்னுக்கு ரூ.2000 முதல் ரூ.2500 வரை விலை கிடைக்கிறது.
இந்நிலையில் உப்பு உற்பத்தியை அடுத்த மாதம் தான் துவங்க முடியும் என தொழிலாளர்கள் தெரிவித்தனர். உப்பு விலை உயர்ந்தும் பயனில்லை. இதனால் இத்தொழிலில் உற்பத்தி, விற்பனையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.