கரூர் துயரம்: போலீசாரின் அறிவுரைகளை தவெகவினர் ஏற்கவில்லை; அரசு அதிகாரிகள் பேட்டி
கரூர் துயரம்: போலீசாரின் அறிவுரைகளை தவெகவினர் ஏற்கவில்லை; அரசு அதிகாரிகள் பேட்டி
UPDATED : செப் 30, 2025 06:25 PM
ADDED : செப் 30, 2025 05:53 PM

சென்னை: கரூரில் கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும், வேலுசாமிபுரம் ஒதுக்கப்பட்டது, ஆம்புலன்ஸ்கள் வருகை குறித்து தமிழக அரசு அதிகாரிகள், டிஜிபி மற்றும் ஏடிஜிபி ஆகியோர் வீடியோ வெளியிட்டு ஆதாரத்துடன் விளக்கம் அளித்தனர்.
குற்றச்சாட்டு
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதன் பின்னணியில் சதி இருக்கலாம் என தவெகவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் தமிழக அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
பேட்டி
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா, பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: விஜய் பிரசாரத்துக்கு கரூரில் பிரசாரம் செய்ய 7 இடங்களில் அனுமதி கேட்கப்பட்டது. தவெகவினர் கூறியதை விட அதிகம் பேர் வருவார்கள் என்பதால் தான் வேலுசாமி புரம் ஒதுக்கப்பட்டது.
தவெகவினர் கேட்ட இடம்
முதலில் லைட் ஹவுஸ் பகுதியில் இருந்த ரவுண்டானா கேட்டார்கள். பாரத் பெட்ரோலியம் பங்க், அமராவதி பாலம் இருந்தது. ஏதாவது அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருந்ததால் அனுமதி தரவில்லை.உழவர் சந்தை கேட்டனர். 30 முதல் 40 அடி அகலம் தான் இருக்கும். பிறகு கடைசியாக வேலுசாமிபுரம் பகுதி ஒதுக்கப்பட்டது. வேலுசாமிபுரத்தை கேட்டது தவெகவினர் தான்.
அதிகளவு கூட்டம் வரும் என முன்கூட்டியே கணிக்க முடியவில்லையா என என கேட்கின்றனர். கூட்டத்திற்கு அனுமதி கேட்டு தவெகவினர் அளித்த கடிதத்தில் 10 ஆயிரம் பேர் தான் எனக்குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், போலீசார் கடந்த கால தரவுகளை வைத்து 20 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என கணக்கிட்டனர்.
50 பேருக்குஒரு போலீசார் பாதுகாப்புக்கு வழக்கமாக ஒதுக்கப்படுவார்கள். . ஆனால், அங்கு, 20 பேருக்கு ஒருவர் என்ற அளவில் பாதுகாப்பு இருந்தது.வண்டியுடன் அதிகம் பேர் வந்தனர் இதனால் 20 ஆயிரத்தை விட அதிகம் பேர் வந்தனர்.
மின்சாரம் துண்டிக்கவில்லை
விஜய் பேசிய இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. கூட்டம் நடந்த போது மின்சாரத்தை துண்டிக்கும்படி தவெகவினர் கேட்டும் துண்டிக்கவில்லை. தொண்டர்கள் ஜெனரேட்டர் அறைக்குள் புகுந்ததால் தான், குறிப்பிட்ட பகுதியில் மின்தடை ஏற்பட்டது விஜய் வாகனம் ஆம்புலன்ஸ் செல்லவே போலீசார் தொண்டர்களை விலக்கிவிட்டனர். போலீசார் தடியடி நடத்தவில்லை.
அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வேலுசாமிபுரத்தில் கூட்டம் இல்லை. அப்போது கூட்டம் கட்டுக்குள் இருந்ததால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தேவைப்படவில்லை. 12 மணிக்கு விஜய் வர வேண்டும். ஆனால், அவரது வருகை தாமதமானது. கூட்டம் மதியம் முதல் கூட ஆரம்பித்துவிட்டது.
தாமதம்
விஜய் வருகை தாமதமானதால் பலர் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சோர்வடைது அங்கேயே அமர்ந்து ஓய்வெடுத்தனர். விஜய் வரும் போது, அவருடன் வந்த கூட்டமும், வண்டி வந்த போது, ஓரத்தில் உள்ள மக்கள் தள்ளிப் போக ஆரம்பித்தனர். அவரது முகத்தை பார்க்க வேண்டும் என மக்கள் முண்டியடித்தனர். இதனால் நெரிசல் ஏற்பட்டது.போலீசாரின் அறிவுரைகளை தவெகவினர் ஏற்கவில்லை.
இரவு 9:45 வரை
தவெக சார்பில் 7 மற்றும் அரசு சார்பில் 6 ஆம்புலன்சுகள் தயாராக இருந்தது.கரூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 19 இருந்தது. பிரசாரம் நடந்த இடத்தில் 6 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் இருந்தன.இரவு 7:14 மணிக்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என அழைப்பு வந்தது. 7:20 மணிக்கு முதல் ஆம்புலன்ஸ் சென்றது.
கூட்ட நெரிசலுக்கு பிறகே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. 7:23மணிக்கு இரண்டாவது ஆம்புலன்ஸ் வந்தது.தனியாருக்கு சொந்தமான 33 ஆம்புலன்ஸ்கள் மூலமும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு 9:45 மணி வரை ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இரவு 7:45 மணி முதல் இரவு 9:45 மணி வரை ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.கட்சியினரின் ஆம்புலன்ஸ் தயாராக இருந்ததால், அவை உடனே கொண்டு வரப்பட்டது.கூடுதல் போலீசார் அண்டை மாவட்டங்களில் இருந்தும் வரவழைக்கப்பட்டனர்.
இரவில் பிரேத பரிசோதனை ஏன்
கரூர் அரசு மருத்துவமனையில் 28 உடல்களை கையாளும் திறன்தான் இருந்தது. பிரேதப் பரிசோதனையை தாமதப்படுத்தி இருந்தால், தேவையற்ற பதற்றம் ஏற்பட்டு இருக்கும். இறந்தவர்களின் உடல்களை உடனே தரும்படி உறவினர்கள் கேட்டனர். உடனுக்குடன் ஒப்படைக்கவே இரவில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. கலெக்டர் ஒப்புதலுடன் நடத்தப்பட்டது. சேலம் பொது சுகாதார மாநாட்டுக்கு சென்ற டாக்டர்களும் வரவழைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன், விசாரணையை துவங்கிவிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
காயம்
ஏடிஜிபி டேவிட்சன் கூறியதாவது:கூட்டம் கூடிய பிறகு பாதியில் பிரசாரத்தை ரத்து செய்தால் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாது. திருச்சி, திருவாரூர் என விஜய் பிரசாரம் செய்த இடங்களில் பலர் காயமடைந்தனர். விக்கிரவாண்டி மாநாட்டில் 42 பேரும், மதுரை மாநாட்டில் 16 பேரும் காயமடைந்தனர். சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.