/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிப்பு ராமநாதபுரம் விவசாயிகள் குமுறல்
/
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிப்பு ராமநாதபுரம் விவசாயிகள் குமுறல்
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிப்பு ராமநாதபுரம் விவசாயிகள் குமுறல்
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிப்பு ராமநாதபுரம் விவசாயிகள் குமுறல்
ADDED : நவ 22, 2025 03:07 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் சாகுபடிகள் துவங்கியுள்ள நிலையில் பயிர் கடன் வழங்காமல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் காலதாமதம் செய்கின்றனர். மான், காட்டுபன்றிகளால் பயிர்கள் சேதமடைகிறது.
நிவாரணம் வழங்க குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் அளித்தனர்.
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர நாராயணன் முன்னிலை வகித்தார். வேளாண் இணை இயக்குநர்(பொ) பாஸ்கரமணியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ராஜலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசுகி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்:
முத்துராமு, மாவட்டத்தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்: நெல் சாகுபடி துவங்கி ஒரு மாதத்தில் அறுவடை பணிகள் துவங்க உள்ள நிலையில் பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். உரம் மட்டும் போதுமா, கடன் கொடுத்தால் தானே சாகுபடி செலவுகளை ஈடுகட்ட முடியும்.
ஜினு, இணைபதிவாளர்: கூட்டுறவு சங்கங்களில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு பயிர்கடன் தொடர்ந்து வழங்கப்படுகிறது. இவ்வாண்டு ரூ.400 கோடிக்கு மேல் வழங்க உள்ளோம்.
கலெக்டர்: தாமதம் செய்யக் கூடாது. விவசாயிகளுக்கு உடனடியாக பயிர்கடன் வழங்க வேண்டும் என இணைப்பதிவாளரிடம் தெரிவித்தார்.
பாலசுந்தர மூர்த்தி, பெரியகண்மாய் பாசன முன்னாள் தலைவர்: வைகை அணையில் தண்ணீர் திறந்து விடும் போது வீணாகும் உபரிநீர் நிலத்தை ஈரப்படுத்த உதவும். எனவே அதற்குரிய ஷட்டர்களை 1 அடி எப்போதும் திறந்திருக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலைச்சாமி, மாவட்ட செயலாளர், காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு: காட்டுபன்றி, மான்களால் பயிர் சேதமடைந்த விவசாயிகளுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது தொடர்பாக விவசாயிகள், வருவாய்துறை, வனத்துறையினர் அடங்கிய முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும். வெண்ணத்துார் கூட்டுறவு சங்கத்தில் பயிர்கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: விலங்குகளால் பயிர் சேதம் குறித்து வி.ஏ.ஓ., ஆர்.ஐ., சான்றிதழ் தேவையில்லை என உத்தரவு உள்ளது. அப்புறம் ஏன் வனத்துறையில் கேட்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட வன அலுவலவரிடம் பேசி தெளிவுபடுத்துங்கள் என கூட்டத்திற்கு வந்திருந்த பாரஸ்டர்களை கலெக்டர் கண்டித்தார்.
தொடர்ந்து வட்டார வாரிய விவசாயிகள் பேசும் போது, பரமக்குடி வட்டாரம் மடந்தை ஊராட்சி நெடுங்குளம் உட்பட பல இடங்களில் வயல்களில் 6 அடிக்கும் கீழே தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்த வேண்டும். கமுதி பகுதிக்கு மிளகாய் சாகுபடிக்குகாப்பீட்டு தொகை இன்னும் வழங்கவில்லை.
ராமநாதபுரத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் அவ்விடங்களில் பதுங்கும் மான், காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன. எனவே கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
வயல் வெளிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் சரி செய்யப்படும். அறுவடை காலம் துவங்கும் முன்னர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்வது தொடர்பாகவும், உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நவ.,23, 24 தேதிகளில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அப்படி வரவில்லை என்றால் கண்மாய் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

