/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைநீர் சூழ்ந்துள்ள ராமேஸ்வரம் கார் பார்க்கிங்
/
மழைநீர் சூழ்ந்துள்ள ராமேஸ்வரம் கார் பார்க்கிங்
ADDED : டிச 27, 2025 04:30 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நகராட்சி கார் பார்க்கிங் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்களை நிறுத்த முடியாமல் பக்தர்கள் அவதிப் படுகின்றனர்.
ராமேஸ்வரம் நகராட்சி நிர்வாகம் 2020ல் ரூ.1.80 கோடியில் நீர்ப்பிடிப்பு பகுதியில் கார் பார்க்கிங் அமைத்தது. இப்பகுதியில் மழை சீசனில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கும். இதனருகே கோயில் நிர்வாகம் சார்பில் 200 கார்கள் நிறுத்தும் அளவுக்கு கார் பார்க்கிங் உள்ளது.
இச்சூழலில் மக்கள் கருத்துக்களை கேட்காமல் நகராட்சி நிர்வாகம் அவசரகதியில் அமைத்ததால் தற்போது மழைநீர் சூழ்ந்து கார் பார்க்கிங் வளாகத்தின் ஒருபகுதி மூழ்கியுள்ளது.
துவக்கத்தில் கார் பார்க்கிங் பயன்பாடின்றி இருந்த நிலையில் 2 ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் தனியாருக்கு குத்தகைக்கு விட்டு பராமரித்தது. இந்த குத்தகை காலம் முடிந்ததால் தற்போது கேட்பாரற்று கிடக்கும் கார் பார்க்கிங்கில் வியாபாரிகள் சிலர் ஜல்லி கற்கள், மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கொட்டி விற்கின்றனர்.
இதனால் இங்கு வாகனங்களை நிறுத்த முடியாமல் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
மக்களுக்கும் பயன்படாமல், நகராட்சிக்கும் வருவாய் இன்றி அதிகாரிகள் அலட்சியத்தால் ரூ.1.80 கோடி வீணாகிப் போனது.

