/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பணி மந்தம் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா தாமதம்
/
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பணி மந்தம் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா தாமதம்
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பணி மந்தம் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா தாமதம்
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் பணி மந்தம் பாம்பன் புதிய பாலம் திறப்பு விழா தாமதம்
ADDED : நவ 07, 2024 02:07 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பணிகள் மந்தமாக நடப்பதால் பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா தாமதமாகி வருகிறது.
பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமானப்பணிகளும், பாலத்தின் நடுவில் துாக்கு பாலம் பொருத்தும் பணிகளும் முடிந்தது. புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம் மற்றும் துாக்கு பாலத்தை திறந்து மூடும் சோதனையும் வெற்றிகரமாக நடந்தது.
புதிய பாலத்தின் பணி அக்.20ல் முடிந்த நிலையில் அம்மாத இறுதியில் புதிய பாலம் திறப்பு விழா நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நவம்பர் துவங்கியும் திறப்புவிழா குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை.
தாமதத்தால் தாமதம்
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் ரூ.90 கோடியில் மறுசீரமைப்பு பணிகள் 2023ல் துவங்கியது. பணி மந்தமாக நடப்பதால் பிளாட்பாரம், கழிப்பறை கட்டுமானப் பணி முழுமை பெறவில்லை. இச்சூழலில் ரயில் போக்குவரத்து துவக்கினால் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் பயணிகளுக்கான வசதிகளின்றி பாதிப்பு ஏற்படும். எனவே தற்சமயம் 1 முதல் 4 வரை உள்ள பிளாட்பாரம் பணியை விரைவில் முடிக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டார். இதனால் பாம்பன் பாலம் திறப்பு விழாவும் தாமதமாகிறது.
நவ.13, 14ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாம்பன் ரயில் பாலம், ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் கட்டுமானப் பணியை ஆய்வு செய்ய உள்ளார். இதனால் ஸ்டேஷனில் பிளாட்பார தளங்களில் புதிய கிரானைட் கற்கள், மின்விளக்குகள் பொருத்தும் பணியில் ஊழியர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று இன்ஜின் சோதனை ஓட்டம்
ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வுக்கு முன்னோட்டமாக இன்று மண்டபம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பாம்பன் புதிய ரயில் பாலம் வழியாக ராமேஸ்வரம் வரை 90 கி.மீ., வேகத்தில் ரயில் இன்ஜின், சரக்கு ரயில் பெட்டிகளுடன் காலை 11:30 முதல் மதியம் 2:30 மணி வரை சோதனை ஓட்டம் நடக்க உள்ளது.
மக்கள் தண்டவாளத்தை கவனமாக கடந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு அந்தந்தப் பகுதி போலீசாருக்கு தகவல் தரப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.