/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மன்னார் வளைகுடா கடலில் அரிய பறக்கும் கோலா மீன்
/
மன்னார் வளைகுடா கடலில் அரிய பறக்கும் கோலா மீன்
ADDED : ஆக 22, 2025 12:43 AM

கீழக்கரை:மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் கோலா மீன்கள் எனப்படும் பறக்கும் தன்மை கொண்ட மீன்கள் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உள்ளன.
மன்னார் வளைகுடா கடலில் அரிதாக காணப்படும் இவ்வகை கோலா மீன்கள் தங்களது எதிரிகளிடமிருந்து தப்பிக்க அவ்வப்போது கடல் மேல் பறக்கும் வித்தையை கற்றுக் கொண்டுள்ளன. கோலா மீன்களின் இருபக்க கன்ன துாவிகள் சிறகுகள் போல நீளமானவை. சில வகை கோலாக்களுக்கு கன்ன துாவியில் போக உடலின் இருபுறமும் இன்னும் இரு துாவிகளும் இயங்கும்.
மீன்களின் வாழ்வில் உள்ள இரு துாவிகளில் கீழ் துாவியை அதாவது வால் அடித்துாவியை சுக்கான் துாவி என்பார்கள். கோலா மீன் பறக்க முடிவு செய்து விட்டால் நீருக்கு அடியில் வேகமாக நீந்தி கடலின் மேற்பரப்பை நோக்கி மணிக்கு 37 கி.மீ., வேகத்தில் விரைந்து செல்லும். அப்போது அதன் சிறகு போன்ற துாவிகள் உடலுடன் இறுக்கமாக ஒட்டி இருக்கும். நீர்மட்டத்தை கிழித்து கோலா மீன் மேலெழும் போது இந்த சிறகு துாவிகள் விரிந்து அதிரத் துவங்கும்.
போதுமான வேகம் கிடைத்ததும் மீன் கடலை விட்டு வெளியேறி பறக்கத் தொடங்குகிறது. கடலை விட்டு வெளியே வருவது அதன் வால் தான். கடல் நீரை விட்டு 4 அடி உயரம் வரை எழும்பி பறக்கும். இவ்வகை மீன்கள் 700 அடி துாரம் வரை பறக்க கூடியது. 30 நொடிக்கு மேல் அவற்றால் பறக்க முடியாது. இவற்றின் வேகம் படிப்படியாக குறைந்து மணிக்கு 20 முதல் 25 கி.மீ., ஆக மாறும் போது பறக்கும் உயரம் குறைந்து மீண்டும் அதன் கடல் மட்டத்தை நோக்கி நெருங்கத் துவங்கும்.
மீனவர்கள் கூறியதாவது: கோலா மீன்கள் அதன் சிறகுகளை அடித்து பறப்பதில்லை. காற்றில் சறுக்கியபடி செல்கிறது. பேரலைகளின் உச்சியில் இருந்து பறக்கும் கோலா மீன்கள் சில வேளையில் வெறும் 4 அடி மட்டுமல்ல 15 அடி உயரம் வரை பறக்க முடியும். இவ்வகை உயரே பறக்கும் கோலா மீன்கள் தான் சில நேரங்களில் கப்பல் தளத்தில் விழுந்து மாலுமிகளுக்கு உணவாக மாறுகின்றன. இவை முரல் மீன்களைப் போன்றே காணப்படும் என்றனர்.