ADDED : ஜன 28, 2025 05:20 AM
தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானம் கடற்கரையில் படித்துறை இல்லாததால் கடலில் புனித நீராட செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. ராமபிரான் சீதையை மீட்க இவ்வழியே சென்றபோது இங்கு இளைப்பாறினார். தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்ததாக வரலாறு உள்ளது.
தை மற்றும் ஆடி மாத அமாவாசை நாட்களில் வெளியூர்களிலிருந்து ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய செல்கின்றனர். கடலில் புனித நீராடி விட்டு சுவாமியை வணங்குவது வழக்கம். கடற்கரையில் சேறும், சகதியுமாக இருப்பதால் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.
எனவே பொதுமக்கள் கடலுக்குள் சென்று நீராடும் வகையில் படித்துறை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பக்கவாட்டு சுவர் அமைக்க வேண்டும். கடலில் இறங்கி நீராடும் வகையில் படித்துறை அமைக்க வேண்டும் என்றனர்.