/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதுரை - தொண்டி புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
/
மதுரை - தொண்டி புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
மதுரை - தொண்டி புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
மதுரை - தொண்டி புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஆக 26, 2025 11:56 PM

திருவாடானை :  மதுரையில் இருந்து திருவாடானை வழியாக தொண்டி வரை புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மக்கள் வலியுறுத்தினர்.
மதுரையில் இருந்து திருவாடானை வழியாக தொண்டி வரை 110 கி.மீ.,தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழித்தடத்தில் அரசு, தனியார் பஸ் போக்குவரத்து மட்டுமே உள்ளது. திருவாடானை தாலுகாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில் உள்ளது. கடல்வாழ் உயிரினங்களின் வர்த்தக இடமாக தொண்டி திகழ்கிறது.
அதிகளவில் கடல்வாழ் உயிரினங்கள் வர்த்தகம் தொண்டியில் நடக்கிறது. பழங்கள், பூக்கள் வாங்குவதற்காக தொண்டியில் இருந்து சிறு வியாபாரிகள் இரவில் பஸ்களில் மதுரைக்கு சென்று வருகின்றனர். சிறு தொழில் வளர்ச்சிக்கு மதுரை- சிவகங்கை--தொண்டி இடையே போதிய பஸ் வசதி இல்லை. அரசு போக்குவரத்து கழகம், இந்த வழித்தடத்தில் இரவு நேர பஸ்களை குறைந்து விட்டன.
இரவில் வர்த்தக ரீதியாக மதுரை செல்லும் சிறு வியாபாரிகள் சிரமம் அடைகின்றனர். அதே போன்று தொண்டி கடற்கரை பகுதியில் இருந்து இறால் மீன், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்கு எடுத்து செல்லப்படுகின்றன. இதனால் 24 மணி நேரமும் போக்குவரத்து உள்ள ஊராக தொண்டி திகழ்கிறது.
ஒவ்வொரு தேர்தல்களிலும் பிரசாரத்தின் போது, நான் வெற்றி பெற்றால் மதுரை--சிவகங்கை வழியாக தொண்டி வரை புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என வாக்குறுதி மட்டுமே கொடுக்கின்றனர். வெற்றி பெற்ற பின் அது மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வாக்குறுதியாக உள்ளது. எனவே மதுரை-தொண்டி புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று திருவாடானை, தொண்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது குறித்து திருவாடானை தேசிய நல்லா சிரியர் விருது பெற்ற உதய குமார் கூறியதாவது: திருவாடானை, தொண்டி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக மதுரை- தொண்டி புதிய ரயில் பாதை திட்டம் உள்ளது. இத்திட்டம் செயல்படுத்தபடும் பட்சத்தில் காளையார்கோயில், திருவாடானை, தொண்டி போன்ற நகரங்கள் தொழில் வளர்ச்சி பெற வாய்ப்பு உண்டு. அது போல் காரைக்குடியில் இருந்து திருவாடானை வழியாக தொண்டிக்கு புதிய ரயில் பாதை திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைசி எல்லையில் உள்ள திருவாடானை தாலுகா போதிய வளர்ச்சி இல்லாமல் பின்தங்கிய தாலுகாவாக திகழ்கிறது. புதிய ரயில்பாதை திட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலை இணைவதால் போக்குவரத்து அதிகமாகும். ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இரு திட்டங்களும் நிறைவேறும் பட்சத்தில் திருவாடானை தாலுகா வளர்ச்சி பெறும். இத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

